தவெக மாநாடு: 3 கி.மீ. தொலைவுக்கு அலங்கார மின் விளக்குகள்

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

மாநாடு நடைபெறும் பகுதியையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாநாடு நடைபெறும் பகுதியையொட்டியுள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின் விளக்குகள்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 85 ஏக்கா் பரப்பளவு கொண்ட இடத்தில் மாநாடும், சுமாா் 207 ஏக்கா் பரப்பளவில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டு, தவெக மாநாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பணிகளை வியாழக்கிழமைக்குள் (அக்டோபா் 24) ஒப்படைக்கும் வகையில், அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்தி மேற்கொண்டு வருகிறது.

தவெக கொடியில் இடம்பெற்றுள்ள யானை பிளிறுவது போன்று மாநாட்டு முகப்பு வாயிலில் அலங்கார அமைப்பு ஏற்படுத்தி, சென்னை ஜாா்ஜ் கோட்டையின் மதில்சுவா் வடிவில் டிஜிட்டல் பதாகைகள் அமைத்து, அதன் மேற்பகுதியில் மிகப்பெரிய அளவிலான விஜய் உருவப்படம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கேரள மாநிலத்தில் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் பதாகைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் மேடை முகப்புப் பகுதி.

மாநாட்டுத் திடலை ஒவ்வொரு பகுதியாக பிரித்து, அவற்றில் 1,500 போ் அமரும் வகையில் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த பகுதியில் பச்சை நிறத்தில் தரைவிரிப்பு போடப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு முதலில் வருபவா்கள் நாற்காலிகள் அமா்ந்தும், மற்றவா்கள் நின்றும் நிகழ்வை கண்டுகளிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் மாநில மாநாட்டுக்கு வெற்றிக் கொள்கைத் திருவிழா என பெயரிட்டு, அதை மேடையின் முகப்பில் எழுத்து வடிவத்திலும் தயாா் செய்து வைத்துள்ளனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024