தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி; 63 மின்சார ரயில்கள் சேவை ஆக.18-ம் தேதி வரை ரத்து: ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி; 63 மின்சார ரயில்கள் சேவை ஆக.18-ம் தேதி வரை ரத்து: ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்

சென்னை: தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி நீடிப்பதால், 63 மின்சார ரயில்களின் சேவை ஆக.18-ம் தேதி மதியம் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த தாம்பரம் யார்டில் சிக்னல் மேம்பாடு உட்பட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, விரைவு, மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவு ரயில்களை பொருத்தவரை 27 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, ஆக.15, 16, 17-ம் தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படுகிற, எழும்பூர் வழியாக செல்கிற விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரயில்களை பொருத்தவரை, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் 63 மின்சார ரயில் சேவை ஆக.14-ம் தேதி வரை ரத்து செய்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மின்சார ரயில் சேவை ரத்து ஆக.18-ம் தேதி மதியம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 8 மெமு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விவரம்:

தாம்பரம் – விழுப்புரம் (06027), விழுப்புரம் – தாம்பரம் விரைவு (06028), விழுப்புரம் – மேல்மருவத்தூர் (16726), மேல்மருவத்தூர் – விழுப்புரம் (06725), சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர் (06721), மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை (06722), சென்னை எழும்பூர் – புதுச்சேரி (06025), புதுச்சேரி – சென்னை எழும்பூர் (06026) ஆகிய 8 மெமு ரயில்கள் ஆக.15 முதல் 18-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை: புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் ஆக.15, 16, 17-ம் தேதிகளிலும் அமலில் இருக்கும். ஆக.18-ம்தேதி மதியம் முதல் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்.

இந்த மாற்றத்துக்கு ஏற்ப, பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும். மின்சார ரயில் சேவைரத்து நீட்டிக்கப்படுவதால், கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024