தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்களை நியமிக்க கோரிக்கை

தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளை மேற்கொள்ள கூடுதல் ஊழியர்களை நியமிக்க கோரிக்கை

சென்னை: தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணிகளுக்கு கூடுதல் ஊழியர்களை நியமித்து பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை ரயில்வே கோட்டத்தின் முக்கிய முனையமான தாம்பரம் ரயில் நிலையத்திலும், இதையொட்டிய யார்டில் சிக்னல் மேம்பாடு உள்பட பல்வேறு மேம்பாட்டு பணிகள், புதிய நடைமேடை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, விரைவு, மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விரைவு ரயில்களைப் பொருத்தவரை, தாம்பரம் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்த்யோதயா விரைவு ரயில் ஆக.14-ம்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 27 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, வைகை, பல்லவன், மலைக்கோட்டை ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்கின்றன. இதன் காரணமாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதுதவிர, சென்னை – தாம்பரம் – செங்கல்பட்டு தடத்தில் 63 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக சிறப்பு மின்சாரரயில்கள் கடற்கரை – பல்லாவரம் வரை இயக்கப்படுகின்றன. இருப்பினும், பயணிகள்சிரமத்தை சந்திக்கின்றனர்.

இதற்கிடையில், தாம்பரம் யார்டில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள 20 முதல்25 பேர் மட்டும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்காரணமாக, இப்பணிகள் முடிய காலதாமதம் ஏற்படும் என பயணிகள் குற்றச்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ரயில் பயணியும், அகில பாரத கிரஹக் பஞ்சாயத்தைச் சேர்ந்தவருமான அ.வரதன் அனந்தப்பன் கூறியதாவது: தாம்பரம் யார்டில் பல்வேறு மேம்பாட்டு பணிக்காக, 20 முதல் 25 பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதால், பணிகள் முடியகாலதாமதம் ஏற்படலாம். அந்த்யோதயா ரயில் ரத்தால், தென் மாவட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

அதேபோல் மின்சார ரயில் சேவை ரத்தால், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே, கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்தி இப்பணியை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தாம்பரம் யார்டில் மேம்பாட்டுப் பணிகள் இரவு பகலாக நடைபெறுகின்றன. இப்பணி தொடங்குவதற்கு முன்பாக, மாநில அரசு, சென்னை மாநகராட்சி நிர்வாகம், போக்குவரத்துத் துறை ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்த பிறகே பணிகள் தொடங்கப்பட்டன.

தற்போது தேவையான அளவுக்கு பணியாளர்கள் உள்ளனர். கூடுதல் பணியாளர்கள் தேவைப்பட்டால் அமர்த்தப்படுவார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்" என்றார்.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு