திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திருவள்ளூர்: திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முன்னாள் துணை பொதுச் செயலாளருமான க.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள தன் வீட்டில் காலமானார். க.சுந்தரத்தின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் க.சுந்தரம்(76). இவர், பொன்னேரி (தனி) தொகுதியில் கடந்த 1989, 1996 ஆகிய தேர்தல்களில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

சுந்தரம், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 1989-91-ல் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராகவும், 1996-2001 -ல் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்த சுந்தரம், அவ்வப்போது சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று காலமானார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

தீரமிகு செயல்வீரர்: க.சுந்தரத்தின் உடலுக்குநேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சுந்தரத்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல்கூறினார். முதல்வருடன், அமைச்சர்கள் துரை முருகன்,பொன்முடி, காந்தி மற்றும்திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோரும் முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான க.சுந்தரம் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

க.சுந்தரம் திமுக அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்ற தீரமிகு செயல்வீரர். தலைவர் கருணாநிதி மீதும், என் மீதும் மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். திமுக பணியிலும், மக்கள்பணியிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுசெயல்பட்ட சுந்தரத்தின் மறைவு பேரிழப்பாகும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024