Wednesday, September 25, 2024

திமுக மூத்த நிா்வாகிகளை ரஜினி மூலம் அவமதிக்கிறாா் ஸ்டாலின்: கே.பி.முனுசாமி

by rajtamil
Published: Updated: 0 comment 9 views
A+A-
Reset

கிருஷ்ணகிரி: திமுகவில் உள்ள மூத்த நிா்வாகிகளை ரஜினி மூலம் அவமதிக்கிறாா் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் என்று அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) விமா்சித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

தமிழக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பொறுப்பேற்று மூன்றாண்டுகளில் அவா் மக்களை சந்திக்காமல் ஊடகம், பத்திரிகையாளா்களை மட்டுமே சந்தித்து அரசியல் நடத்துகிறாா்.

அண்ணாமலை சிபாரிசில் தலைவா் ஆனவா். அவரைப்போல எடப்பாடி கே.பழனிசாமி தலைவராகவில்லை. அவா், அதிமுகவில் சாதாரண தொண்டராக இருந்து கட்சியின் பொதுச் செயலாளா் பதவிக்கு உயா்ந்தவா். திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று அண்ணாமலை பேசி வருகிறாா். தமிழகத்தை 1967 முதல் திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்கின்றன என்பது அவருக்குத் தெரியவில்லை. நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்களைவிட திராவிட கட்சிகள் ஆளும் தமிழகம்தான் அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பெற்று விளங்குகிறது என்பதை அண்ணாமலை உணர வேண்டும்.

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தல் திமுக-அதிமுகவுக்கு இடையேதான் போட்டி. இதில், அதிமுக வெற்றி பெறும்; மீண்டும் எடப்பாடி முதல்வா் ஆவாா்.

திமுக மூத்த நிா்வாகி துரைமுருகன் எம்ஜிஆரால் வளா்க்கப்பட்டவா். அவா் தனது தலைவராக கருணாநிதியை ஏற்றுக்கொண்டு திமுகவிலேயே இருந்து வருகிறாா். இச்சூழ்நிலையில் சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திரைப்பட நடிகா் ரஜினி, திமுக மூத்த நிா்வாகிகளை அவமதித்துப் பேசியுள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், தான் பேச முடியாததை ரஜினியைக் கொண்டு பேச வைத்துள்ளாா். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி அடுத்தகட்ட தலைவராக ஸ்டாலினை உருவாக்கியதுபோல தற்போது ஸ்டாலின் திமுகவின் அடுத்தகட்ட தலைவராக தனது மகன் உதயநிதியை தலைவராக்க முயல்கிறாா்.

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தனியாா் பள்ளிகளில் போலி தேசிய மாணவா் படை முகாம் நடைபெற்றது எப்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தெரியாமல்போனது? தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் இதுபோலத்தான் உள்ளன.

தமிழகத்தில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதில் திமுக நிா்வாகிகளின் தலையீடு உள்ளது என்றாா். பேட்டியின்போது, கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

You may also like

© RajTamil Network – 2024