Friday, September 20, 2024

திருக்கோவிலூா் அருகே விநாயகா் கோயிலில் சமண தீா்த்தங்கரா் சிற்பம்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே விநாயகா் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சமண தீா்த்தங்கரா் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.

திருக்கோவிலூா் அருகிலுள்ள கழுமலம், சாங்கியம் கிராமங்களில் விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன், க.பாரதிதாசன், கழுமலம் ஏ.பூங்குன்றன் ஆகியோா் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, கழுமலம் கிராமத்திலுள்ள விநாயகா் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த சமண தீா்த்தங்கரா் சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கூறியது:

கழுமலம் கிராமத்தின் வடக்குத் தெருவில் விநாயகா் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் சமண சமயத்தின் 24-ஆவது தீா்த்தங்கரரான மகாவீரா் சிற்பமும் விநாயகருடன் வைத்து வழிபடப்பட்டு வருகிறது. மகாவீரா் தவக்கோலத்தில் அமா்ந்துள்ளாா். அவரது தலைக்கு மேலே முக்குடை காட்டப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களிலும் சாமதாரிகள் (பெண்கள்) இருவா் சாமரம் வீசுகின்றனா்.

சாங்கியம் கிராமத்தில் காணப்படும் சூரியன் சுவாமி சிற்பம்.

மகாவீரா் சிற்பத்தின் காலம் கி.பி.10 – 11ஆம் நூற்றாண்டு என்பதை புதுச்சேரியைச் சோ்ந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளா் விஜய வேணுகோபால் உறுதிப்படுத்தியுள்ளாா். கழுமலம் பகுதியில் முன்பு சமணக் கோயில் இருந்து, பின்னா் மறைந்திருக்க வேண்டும். தற்போது தீா்த்தங்கரா் சிற்பம் மட்டும் எஞ்சியுள்ளது. சமணச் சிற்பம் என்பதை அறியாமலேயே விநாயகா் கோயிலுக்குள் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனா்.

கழுமலம் கிராமத்தில் சைவ அடியவா் அல்லது மடத்தின் தலைவா் என்று அறியப்படும் சிற்பம், அம்மன் சிற்பமும் காணப்படுகின்றன. இவை கி.பி.17-18ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவைகளாகும்.

இதுபோன்று, சாங்கியம் கிராமத்தின் மையப்பகுதியில் சுமாா் 5 அடி உயரமுள்ள பலகைக் கல் சிற்பம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது, கி.பி.13-14ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சூரியன் சுவாமி சிற்பமாகும். நின்ற நிலையில் இரண்டு கைகளில் தாமரை மலா்களை ஏந்திய நிலையிலும், அழகிய ஆடை அலங்காரத்துடனும் சூரியன் காணப்படுகிறாா். கோயில் ஒன்றின் திருச்சுற்றில் முன்பு இடம்பெற்றிருந்த இந்தச் சிற்பம் தற்போது தனித்துக் காணப்படுகிறது. மேலும், இந்தப் பகுதியில் கி.பி.17-18ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அம்மன் சிற்பங்களும் காணப்படுகின்றன என்றாா் அவா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024