திருக்கோவில்கள் சார்பில் மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழா – அமைச்சர் சேகர்பாபு தகவல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

திருக்கோவில்கள் சார்பில் மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருக்கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் – கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலு மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நவராத்திரி பெருவிழா 03.10.2024 முதல் 12.10.2024 வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்கள் சார்பில் கமலமுனி சித்தர், பாம்பாட்டி சித்தர், சுந்தரானந்த சித்தர் ஆகிய சித்தர் பெருமக்களுக்கும், திருஅருட்பிரகாச வள்ளலார், தெய்வப் புலவர் சேக்கிழார், சமய குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பர் பெருமான்), நாலாயிர திவ்ய பிரபந்த தமிழ் மறைநூலினைத் தொகுத்தவரான ஸ்ரீமத்நாதமுனிகள் மற்றும் அவரது பெயரன் ஆளவந்தார் ஆச்சாரியார், 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்தாண்டு 7 திருக்கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவும், சென்னை, மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டது.

உலகில் தீமைகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்ற தொடர் நிகழ்வாக கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா திருக்கோவில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் 03.10.2024 முதல் 12.10.2024 வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு வழிபாடும், இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக 03.10.2024 அன்று சகலகலாவல்லி மாலை வழிபாடு மற்றும் திரைப்பட பின்னணி பாடகி கலைமாமணி மாலதி மற்றும் முகேஷ் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி, தினந்தோறும் ஒரு வழிபாட்டுடன் கலைமாமணி வீரமணி ராஜு மற்றும் அபிஷேக் ராஜு குழுவினர், பின்னணி பாடகர் டாக்டர் வேல்முருகன், இறை அருட்செல்வி தியா, செல்வன் சூரிய நாராயணன் ஆகியோரின் பக்தி இசையும், மீனாட்சி இளையராஜா குழுவினரின் கிராமிய பக்தி இசை, கலைமாமணி தேச மங்கையர்க்கரசி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

திருக்கோவில்கள் சார்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா நிகழ்ச்சிகளில் தவத்திரு ஆதீனங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சமய சான்றோர்கள் மற்றும் இறையன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024