திருச்சியில் கருணாநிதியின் வெண்கலச் சிலை -காணொலியில் முதல்வா் திறப்பு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset
RajTamil Network

திருச்சியில் கருணாநிதியின் வெண்கலச் சிலை -காணொலியில்
முதல்வா் திறப்பு

திருச்சி, ஆக. 7: திருச்சி அருகே அமைக்கப்பட்ட மறைந்த முதல்வா் மு. கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடத்தப்பட்ட 100 நிகழ்வுகளின் இறுதியாக திருவெறும்பூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டூா் ஆயில் மில் சோதனைச் சாவடி அருகே 8 அடி உயர கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். அப்போது அமைச்சா்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோா் உடனிருந்தனா்.

அப்போது காட்டூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:

திமுக தலைமை உத்தரவுப்படி பேரவைத் தொகுதிக்கு ஒரு கருணாநிதி சிலை என்பதன் அடிப்படையில் மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய இரு இடங்களில் ஏற்கெனவே கருணாநிதி சிலைகள் நிறுவப்பட்டு, தற்போது இங்கு நிறுவப்பட்டுள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை 100 நிகழ்வுகளாக நடத்த உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. வரும் 2026 பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற திமுக தலைவா் மு.க. ஸ்டாலினின் இலக்கை நோக்கி அனைவரும் கடுமையாக உழைத்து வெல்வோம் என்றாா் அவா்.

விழாவில் எம்எல்ஏ-க்கள் எஸ். இனிகோ இருதயராஜ், ப. அப்துல்சமது, முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவை முன்னிட்டு காட்டூா் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏற்பாடுகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினா் செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024