Wednesday, October 2, 2024

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset
RajTamil Network

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் தொடங்கிய திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக. 13) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திருவிழா கொடிப்பட்டமானது திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து காலை 5.37 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய சிவக்குமார் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார்.

அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு காலை 5.46 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் எஸ். ஞானசேகரன், விதாயகர்த்தா சிவசாமி தீட்சிதர், கண்காணிப்பாளர் அஜித், இணை ஆணையரின் நேர்முக எழுத்தர் கார்த்திகேயன், மணியம் செந்தில்குமார் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை வேளைகளில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். வருகின்ற ஆக.22-ஆம் தேதி பத்தாம் திருவிழாவை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024