Wednesday, September 25, 2024

திருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை: லட்டு முன்பை விட சுவையாக உள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நைவேத்தியத்துக்காகத் தயாரிக்கப்பட்ட பிரசாதம், பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கடந்த ஆட்சியில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக, ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு குற்றம் சாட்டினார். இதனால் நெய்யை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த நெய்யில் கலப்படம் செய்திருந்தது உறுதி ஆனது. இதனால் உலகம் முழுவதும் உள்ள வைணவ பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்காக பரிகாரம் செய்ய அதிகாரிகள், அர்ச்சகர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 6 மணியில் இருந்து 10 மணிவரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கக்கிணறு அருகில் வைகானச ஆகம நியதிப்படி ஆகம ஆலோசகர் ராமகிருஷ்ண தீட்சிதர் மேற்பார்வையில் 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் பரிகாரப் பூஜை செய்யப்பட்டது. அதற்காக 3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன.

யாக பூஜையில் வாஸ்து ஹோமம், பரிகாரப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதில் வைக்கப்பட்ட புனிதநீர் மூலவர் சன்னதி, பூந்தி மற்றும் லட்டுகள் தயாரிக்கும் கூடம், அன்னப்பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி, லட்டுகள் விற்பனை செய்யக்கூடிய கவுண்ட்டர்கள், கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளில் தெளிக்கப்பட்டது. மேலும் பரிகாரப் பூஜையின் ஒரு பகுதியாக தர்ப்பை புல் தீ கோவில் வளாகம் முழுவதும் கொண்டு செல்லப் பட்டது. அதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தியாகும் எனக் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், திருப்பதி லட்டுவை சுற்றி சர்ச்சைகள் வெடித்தாலும் இது லட்டு விற்பனையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அதன் விற்பனை மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 4 நாட்களில் மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களில் மட்டும், அதாவது லட்டு மீதான சர்ச்சை உச்சத்தில் இருந்த நாட்களில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் விற்பனையாகியுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேல் லட்டுக்கள் விற்பனையாகியுள்ளது.

19 ஆம் தேதி 3.59 லட்சம் லட்டுக்களும், 20 ஆம் தேதி 3.17 லட்சம் லட்டுக்களும், 21 ஆம் தேதி 3.67 லட்சம் லட்டுக்களும், 22 ஆம் தேதி 3.60 லட்சம் லட்டுக்களும் விற்பனையாகியிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல, லட்டுவின் சுவை முன்பை விட கூடியிருப்பதாக பக்தர்களும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விஜயவாடாவை சேர்ந்த லக்ஷ்மி நாராயாண என்ற பக்தை கூறுகையில், லட்டுவின் சுவை முன்பை விட அருமையாக உள்ளது. லட்டுவின் சுவை மற்றும் மணத்திலும் மாறுபாடு உள்ளது என்றார். லட்டு தயாரிப்பில் கடலைப்பருப்பு, பசு நெய், சர்க்கரை, முந்திரி, பாதாம், உலர் திராட்சை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், லட்டு தயாரிப்பில் தினமும் 15,000 கிலோ அளவிலான பசு நெய் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024