திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்துள்ளது என ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். எனினும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான இந்த குற்றச்சாட்டை ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் புனித தன்மையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாதுகாக்கும் என அதன் செயல் அதிகாரி மற்றும் கோவிலின் ஒரு பிரதிநிதியான ஜே. சியாமள ராவ் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறும்போது, லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தும் தூய்மையான பசுநெய் உள்ளிட்ட பொருட்களின் தரத்தில் சமரசம் செய்யப்படமாட்டாது என்று அவர் கூறியுள்ளார்.
திருப்பதி கோவிலின் புனித தன்மை மற்றும் தெய்வீக தன்மை ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை எப்போதும் உள்ளது என்றார். ரூ.75 லட்சம் மதிப்பிலான, நெய் கலப்படம் கண்டறியும் சாதனம் வருகிற டிசம்பர் அல்லது அடுத்த ஜனவரிக்குள் வந்து விடும். இதனை, தேசிய பால்பொருட்கள் மேம்பாட்டு வாரியம் நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. இதனால், ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் சுவை உறுதி செய்யப்பட வேண்டும். தூய்மையான பசுநெய்யை பயன்படுத்தி அதன் புனித தன்மை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தெளிவுப்பட கூறியுள்ளார். ஏனெனில், கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுடன் அது தொடர்புடையது என்று அதிகாரி சியாமள ராவ் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து, லட்டுகளின் தரம் மற்றும் சுவை ஆகியவற்றை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்த தொடங்கி விட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடந்த சில ஆண்டுகளாக லட்டுகள் தரம் குறைந்து காணப்படுகின்றன என கூறி வருகின்றனர். இதேபோன்று லட்டுகளின் தயாரிப்பில் ஈடுபடுபவர்களிடமும் அதுபற்றி கேட்டறிந்த பின்னர், முதன்முறையாக, கலப்பட பரிசோதனைக்காக வெளியே உள்ள ஆய்வகத்திற்கு நெய்யை அனுப்பினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 5 நிறுவனங்களிடம் இருந்து நெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.320 முதல் ரூ.411 வரை உள்ளது. ஆனால், தூய்மையான நெய்யை விநியோகிக்க இந்த விலை சாத்தியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், நல்ல தரம் வாய்ந்த நெய்யை உறுதி செய்யும்படி, புதிய நிர்வாகம் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இல்லையென்றால், கலப்பட பரிசோதனைக்காக வெளியே உள்ள ஆய்வகங்களுக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்படும். அது கலப்படம் என கண்டறியப்பட்டால் தடை செய்யப்படும்.
ஆனால், இதுபோன்று எச்சரிக்கை விடுத்த பின்னரும், நெய் விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று 4 நெய் லாரிகளை அனுப்பியிருந்தது. முதல்கட்ட விசாரணையில், அவை குறைவான தரம் கொண்டவை என தெரிய வந்துள்ளது இதனால், விநியோகத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. நிபுணர்களுடன் முழு அளவில் ஆய்வு செய்த பின்னர், இவற்றை வாங்குவது அல்லது வேண்டாம் என்பது பற்றிய ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.