Wednesday, November 6, 2024

திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்: மிகுந்த மனவேதனை அளித்துள்ளது – பவன் கல்யாண்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்த நிலையில், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில்,திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருப்பதி பாலாஜி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு) கலந்திருப்பது கண்டு நாம் அனைவரும் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அப்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான வாரியம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எங்களின் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதி பூண்டுள்ளது.

ஆனால், இது கோவில்களை இழிவுபடுத்துதல் மற்றும் பிற தர்ம நடைமுறைகளைச் சுற்றியுள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இதுபோன்ற பிரச்சினைகளை ஆய்வு செய்ய, தேசிய அளவில் 'சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்' அமைக்கும் நேரம் வந்துவிட்டது.

கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்த களங்களில் உள்ள அனைவராலும் தேசிய அளவில் ஒரு விவாதம் நடக்க வேண்டும். சனாதன தர்மத்தை எந்த வகையிலும் இழிவுபடுத்துவதற்கு முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024