Friday, October 4, 2024

திருப்பதி லட்டு விவகாரம்: மத்திய உணவு பாதுகாப்புத் துறைக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை சரமாரி கேள்வி

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

திருப்பதி லட்டு விவகாரம்: மத்திய உணவு பாதுகாப்புத் துறைக்கு ஐகோர்ட் மதுரைக் கிளை சரமாரி கேள்வி

மதுரை: திருப்பதி லட்டு விவகாரத்தில் திண்டுக்கல் நிறுவனத்துக்கு உரிய தகவல்கள் இல்லாமல் நோட்டீஸ் அனுப்பியது ஏன் என மத்திய உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஜூன் மாதம் முதல் எங்கள் நிறுவனம் நெய் விநியோகம் செய்து வந்தது. அந்த நெய்யில் (மாட்டுக் கொழுப்பு) கலப்படம் இருப்பதாக குஜராத்தை சேர்ந்த நிறுவனம் அறிக்கை அளித்தது. இதையடுத்து எங்கள் நிறுவனத்திடம் நெய் கொள்முதல் செய்ய தடை விதித்து, எங்கள் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தானம் கருப்புப் பட்டியலில் சேர்த்தது.

இதையடுத்து மத்திய உணவு பாதுகாப்புத்துறை எங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் முறையாக ஆய்வு நடத்தாமல் தனியார் ஆய்வகம் அளித்த அறிக்கை அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே, மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் தரப்பில், “மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை 2 நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ்களுக்கு விளக்கம் தர போதிய கால அவகாசம் வழங்கவில்லை. அந்த நோட்டீஸ்களில் என்ன விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது குறித்தும் குறிப்பிடப்படவில்லை. செப். 29-ல் நோட்டீஸ் அனுப்பி அக். 2-ல் நேரில் ஆஜராக கூறியுள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அனுப்பிய சோதனை அறிக்கையில் நெய்யில் (மாட்டுக் கொழுப்பு கலந்ததாக) கலப்படம் இருப்பதாக எங்கும் குறிப்பிடவில்லை. சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் சோதனை அறிக்கையில் லட்டில் எந்தவித கலப்படமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள நிறுவனம் அனுப்பிய அறிக்கையில் முரண்பாடு உள்ளது. எனவே, மத்திய உணவுப் பாதுகாப்பத்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில், “சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் நெய் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்க போதுமான கால அவகாசம் வழங்க தயாராக உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, “ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனத்துக்கு எந்த சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது?. எந்த வகையான விதிமுறை மீறல் காரணமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது?. தற்போது கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நோட்டீஸ்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாமல் தெளிவில்லாமல் உள்ளது.

செப்.29-ல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விடுமுறை நாளான அக்.2-ல் விளக்கம் அளிக்க கோரினால் எப்படி விளக்கம் அளிக்க முடியும்? சம்பந்தப்பட்ட நிறுவனம் செய்த விதிமீறல் குறித்து நோட்டீஸ்களில் எந்தவிதமான தகவல்களும், விவரங்களும் இல்லை.

ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அதற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். சென்னை ஆய்வக சோதனை அறிக்கையும், குஜராத் ஆய்வகம் அளித்த அறிக்கையிலும் முரண்பாடு உள்ளது. சென்னை கிங்ஸ் ஆய்வக அறிக்கையில் கலப்படம் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் நிறுவனம்.

மத்திய உணவு பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பால் உற்பத்தி நிலையத்தில் சோதனை செய்துள்ளது. அந்த சோதனையின் முடிவுகள் எங்கே? இதுவரை ஏன் அதை வெளியிடவில்லை?. இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. தற்போது இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் முக்கிய பொருளாக பேசப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் கூறியது போல் அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவது தான் சரியாக இருக்கும். எனவே, புதிதாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதற்குப் பதிலளிக்க 14 நாள் கால அவகாசம் வழங்க வேண்டும். மனுதாரர் நிறுவனம் உரிய கால அவகாசத்தில் பதிலளித்து நிவாரணம் பெறலாம்” என உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024