திருமலை,
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு தற்போது முதல்-மந்திரியாக உள்ளார். இந்த சூழலில் திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை அவரது பார்வைக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள் ராவ் கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்.டி.டி.பி. பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முந்தைய ஜெகன் மோகன் அரசு மீது ஆந்திரமுதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவ பொம்மையை எரித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆந்திராவின் பல்வேறு காவல் நிலையங்களில் இந்து அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். சுப்ரீம்கோர்ட்டு மற்றும் ஆந்திர ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த சூழலில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் நேற்று மதியம் உயர்நிலை கூட்டம்நடைபெற்றது.
அதன் பிறகு, லட்டு பிரசாதம் தயாரிக்கும் நெய்யில் ஜெகன் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து முழு விளக்க அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை காக்கும் விஷயத்தில், ஆகம, வைதிக, தார்மீக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்த சூழலில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய மந்திரி பாண்டி சஞ்சய் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். திருமலை பிரசாதம் தயாரிப்பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும் என ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் உள்துறை இணை மந்திரி பண்டி சஞ்சய் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பான கடிதத்தில் திருமலையில் பணிபுரியும் பல ஊழியர்கள் இந்து அல்லாத சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இது "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லட்டு கலப்படம் தொடர்பான விவகாரம் ஆந்திர பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி போராட்டத்தை தொடங்கி உள்ளது.