Saturday, September 21, 2024

திருப்பத்தூரில் சிறுத்தைக்கு பயந்து காரில் சிக்கித் தவித்தவர்கள் மீட்பு

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

திருப்பத்தூரில் சிறுத்தைக்கு பயந்து காரில் சிக்கித் தவித்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் அருகே உள்ள தனியார் பள்ளியில் இன்று மாலையில் திடீரென்று பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த சிறுத்தை பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்ட 55 வயது கோபாலை தாக்கிவிட்டு அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது. இதில் கோபால் தலையில் காயமடைந்துள்ள நிலையில் அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை கார் ஷெட்டுக்குள் சென்று பதுங்கியது. அப்போது அங்கு இருந்த 5 பேர் சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அலறியடித்தபடி அருகே இருந்த காருக்குள் ஏறி பதுங்கி கொண்டனர். காருக்குள் அவர்கள் இருப்பதை பார்த்த சிறுத்தை, அவர்கள் பதுங்கியுள்ள காரின் அருகே உள்ள இன்னொரு காரின் அருகே பதுங்கி உள்ளது.

திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். வனத்துறையினர் கார் ஷெட்டை சுற்றி வலை விரித்து சிறுத்தை வெளியே வராத வகையில் ஏற்பாடு செய்தனர். அதோடு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக காரில் சிக்கித்தவித்தவர்களை மீட்கும் பணியில் வனத்துறை மற்றும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின் காரில் சிக்கித்தவித்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024