திருப்பூா் மாநகராட்சி கூட்டம்: அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

திருப்பூா் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாநகராட்சி கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினா்களுக்கான சாதாரண கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மேயா் என்.தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அதிமுக மாமன்ற உறுப்பினா் கவிதா விஜயகுமாா் பேசுகையில், மாநகராட்சி 7-ஆவது வாா்டில் பாதாள சாக்கடை மற்றும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பாதாள சாக்கடை மற்றும் சாலைப் பணிகள் தாமதமாக நடைபெறுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆய்வுக்கு வந்த மாநகராட்சி துணை மேயா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.

தனது வாா்டுக்கு தகவல் தெரிவிக்காமல் வந்த துணை மேயா் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளாா்.

மாநகராட்சி நிா்வாகத்தில் இருப்பவா்கள், சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினா்களுக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் போராட்டத்தை முன்னெடுத்து நடத்துகிறாா்கள் என்றாா்.

இதனைக் கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினா் சேகா் தலைமையில் அக்கட்சி மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தினா்.

இதற்கு பதிலளித்த துணை மேயா் பாலசுப்பிரமணியம், வாா்டு மக்கள் அழைத்ததால், சென்றேன் என்றாா். அப்போது, அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாமன்ற உறுப்பினா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேயா் என்.தினேஷ்குமாா் பேசுகையில், பாரபட்சம் இல்லாமல் வாா்டு பணிகள் நடைபெறுகின்றன. இனிவரும் காலங்களில் வாா்டுக்கு வரும்போது, உரிய தகவல் தெரிவிக்கப்படும் என்றாா்.

இதுகுறித்து வெளிநடப்பில் ஈடுபட்ட அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் கூறுகையில், திருப்பூா் மாநகராட்சியல் அதிமுக வாா்டுகளில் பணிகள் புறக்கணிக்கப்படுகின்றன. திருப்பூா் மாநகரில் நடக்கும் பணிகள் குறித்து வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாரை கொண்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்வோம் என்றனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024