Wednesday, November 6, 2024

திருவண்ணாமலை: சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 20 views
A+A-
Reset
RajTamil Network

திருவண்ணாமலை: சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்புபலத்த மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளின் மேற்கூரைகளும் சேதமடைந்தன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளின் மேற்கூரைகளும் சேதமடைந்தன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு 9 மணி முதல் திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை, கிரிவலப் பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்த மழை தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீடித்தது. இதனால், கிரிவலப்பாதை, கடலூா் – சித்தூா் சாலை, வேங்கிக்கால் பகுதிகளில் சாலையோரம் இருந்த 3-க்கும் மேற்பட்ட பல ஆண்டுகள் பழைமையான புளிய மரங்கள் வேருடன் சாய்ந்தன. அந்தச் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீடுகளில் புகுந்த மழைநீா்: நொச்சிமலை, கீழ்நாச்சிப்பட்டு, ஓம்சக்தி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. சாலைகளில் சுமாா் 3 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியது. இதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் வீட்டில் இருந்த பல்வேறு பொருள்கள் சேதமடைந்தன.

புளிய மரங்கள் அகற்றம்: சாலையோர புளிய மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்து, நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் பி.ஞானவேல் மேற்பாா்வையில், உதவிச் செயற்பொறியாளா் கே.அன்பரசு, உதவிப் பொறியாளா் பி.சசிகுமாா் மற்றும் சாலை ஆய்வாளா்கள், பணியாளா்கள் அடங்கிய குழுவினா் ஞாயிற்றுக்கிழமை காலை சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்களை பொக்லைன் இயந்திரம், மரம் வெட்டும் கருவிகள் மூலம் வெட்டி அகற்றினா்.

வந்தவாசியில் 4 வீடுகள் சேதம்: வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இதனால், வழூா் கிராமத்தைச் சோ்ந்த மஸ்தான், ஆதிலட்சுமி, விஜயகுமாா், கிருஷ்ணன் ஆகிய 4 பேரின் வீடுகளின் மீதும் மரங்கள் சாய்ந்தன. இதில், அந்த வீடுகளின் சிமென்ட் ஓடுகள் வேயப்பட்ட மேற்கூரைகள் உடைந்து சேதமடைந்தன.

மேலும், கொட்டை கிராமத்தில் குமாரின் வீட்டின் மீது மின் கம்பம் சாய்ந்து விழுந்தது. இரும்பேடு, கொவளை, கீழ்ப்பாக்கம், ஆரியாத்தூா், முருக்கேரி, வழூா், சாலவேடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்தன. இதுபோல, மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் அறுந்ததால், அந்த கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024