Wednesday, November 6, 2024

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு – 4 மாணவிகள் மயக்கம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு – 4 மாணவிகள் மயக்கம்

சென்னை: கடந்த வாரம் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நேற்று 4 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இதனால், அப்பள்ளியை ஏராளமான பெற்றோர் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த அக்.25-ம் தேதி வாயு கசிவு ஏற்பட்டு 39 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத் திணறலும் வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அருகில் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை முடிந்து மாலை வீடு திரும்பினர். பள்ளிக்கும் தொடர் விடுமுறை விடப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர். நவீன சாதனங்களைக் கொண்டு ஆய்வு செய்தும், வாயு கசிவு எங்கிருந்து வந்தது என்பது கண்டறியப்பட்டவில்லை. எனினும் ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், தொடர் விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. ஏற்கெனவே வாயு கசிவால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளி நிர்வாகத்திடமும் ஆசிரியர்களிடமும் கேள்வி எழுப்பினர். இந்தச் சூழலில், வகுப்பு இடைவேளை நேரத்தில் திடீரென துர்நாற்றம் வீசியது. அப்போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவிகள் 4 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் மற்ற மாணவிகளும் அலறியடித்து வெளியே ஓடினர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவிகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தகவல் பரவியதால் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் பள்ளியை திறந்தது ஏன், அரசிடம் அனுமதி வாங்கினீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இதனால், பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே, வாயு கசிவு தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர். அரசு மருத்துவர்கள் குழுவும் வந்து மாணவிகளை பரிசோதனை செய்தது. வாயு கசிவை தற்போது வரை கண்டறிய முடியவில்லை. இதற்கிடையே, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து
அழைத்துச் செல்லும் பெற்றோர்.

கண்டனம்: இதனிடையே இந்த விவகாரம் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு உரிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தாமல் அவசரகதியில் மீண்டும் பள்ளியை திறக்க அரசு அனுமதித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாயு கசிவு எப்படி ஏற்பட்டது என்பதை முழுமையாக கண்டறிந்து, அதற்கு தீர்வு கண்ட பின்னரே பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024