வயநாடு தொகுதிக்கு தான் அடிக்கடி வருவதை விடுத்து தில்லியில் தங்குவதை தொகுதி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
"அத் தொகுதியின் முன்னாள் வேட்பாளர் ராகுலை போன்று பிரியங்கா காந்தியும் தொகுதியில் தொடர்ந்து இருக்க மாட்டார். அவர் தொகுதிக்கு எப்போதாவது ஒருமுறை மட்டுமே வந்துசெல்வார்' என்று இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சத்யன் மோகரி விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், கோதன்சேரியில் செவ்வாய்க்கிழமை பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:
எனது மகன் பள்ளியில் தங்கி பயிலும் காலத்தில் அவரைக் காண நான் அடிக்கடி பள்ளிக்குச் செல்வேன். அப்போது பள்ளி முதல்வரே எனது சிரமத்தைக் கருத்தில் கொண்டு அடிக்கடி வருவதைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இப்போது யாராவது உங்களிடம் நான் உங்களைக் காண வரமாட்டேன் என்று கூறினால், நீங்களும் அந்தப் பள்ளி முதல்வரைப்போல இங்கு வருவது போதும். தில்லியில் தங்குங்கள் என்று கூறுவீர்கள். கடமையும் பொறுப்பும் பாசப் பிணைப்பும் கொண்ட வயநாடு மக்கள் தங்கள் சார்பில் மக்களவைக்குச் செல்ல எனக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளனர் என்றார்.
தனது 5 நாள் பயணத்தில் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்பிரசாரத்தில் பேசிய பிரியங்கா, மாநிலத்தில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை குறித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் அரசியல் பிரிவினைவாதம் குறித்தும் விமர்சித்தார்.
வயநாடு தொகுதியில் மருத்துவக் கல்லூரி அமைத்தல், இரவு நேரப் பயணத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், மனித}விலங்கு மோதல்கள் விவகாரங்களில் தனது சகோதரர் ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சிகளை நினைவுகூர்ந்தார்.
ராகுல் காந்தி கொடுத்த அழுத்தத்தால் வயநாடு மருத்துவமனை தற்போது மருத்துவக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்குள்பட்டு 2 தனித் தொகுதிகள் உள்பட மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
பிரியங்கா காந்தியின் இரண்டாம் கட்டத் தேர்தல் பிரசாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து அவர் வயநாட்டில் நவ.7 ஆம் தேதி வரை பிரசாரம் செய்கிறார்.
இத்தொகுதிக்கு நவ. 20 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முன்னதாக ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். அதையடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.