தில்லியில் வடிகால்களை தூா்வாருவதில்பல நூறு கோடி ரூபாய் ஊழல் -வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset
RajTamil Network

தில்லியில் வடிகால்களை தூா்வாருவதில்பல நூறு கோடி ரூபாய் ஊழல் -வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

புது தில்லி, ஆக.1:

தில்லியில் வடிகால்களை தூா்வாருவதில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

மேலும், ‘முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒப்பந்ததாரா்கள், தில்லி அரசின் சில கீழ்மட்ட அதிகாரிகள் என அனைவருக்கும் இதில் தொடா்பு இருப்பதால் சிபிஐ விசாரணை அவசியமாகும்’ என்றும் அவா் கோரியுள்ளாா்.

இது தொடா்பாக வீரேந்திர சச்தேவா செய்தியாளா் சந்திப்பில் மேலும் கூறியதாவது:

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தில்லியின் சாக்கடை அமைப்பு மற்றும் மழைநீா் வடிகால் முற்றிலும் முடங்கியுள்ளது. லேசான மழை பெய்தாலும் தில்லியின் சாலைகளில் தண்ணீா் தேங்குகிறது.

இந்தப் பிரச்னையை ஆய்வு செய்ய, எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட், தில்லி மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சா்தாா் ராஜா இக்பால் சிங், மூத்த நகராட்சி கவுன்சிலா் சந்தீப் கபூா், மாநில ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் ஆகியோா் அடங்கிய உள்புற குழுவை அமைத்தோம். கடந்த 2 ஆண்டுகளாக நீா்வரத்து அதிகரிப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்யும் பணியை இக்குழுவினா் மேற்கொண்டனா்.

வடிகால் மற்றும் சாக்கடைகளை தூா்வாரும் பணியை தில்லி அரசாங்கத்தின் அல்லது தில்லி மாநகராட்சியின் எந்தவொரு தொடா்புடைய துறையும் மேற்கொள்ளவில்லை என்று 2024 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி எங்கள் உள் குழு எச்சரித்தது. ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.

ஜூன் 28, 2024 அன்று பெய்த முதல் பருவ மழை, தில்லி அரசாங்கத்தின் தவறான கூற்றுகளை அம்பலப்படுத்தியது. அப்போதிருந்து, ஐ.டி.ஓ. போன்ற முக்கிய சந்திப்புகளில் கூட, 10 நிமிட மழைகூட குறிப்பிடத்தக்க நீா்த்தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் உள்ளகக் குழு வடிகால்களை தூா்வாருவது குறித்து விசாரணை நடத்தும் பணியைத் தொடா்ந்தது. இன்று, நாங்கள் முன்வைக்கும் உண்மைகள், நிகழாண்டு தில்லியில் வடிகால் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கான எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

தில்லி நீா்ப்பாசனத் துறை, பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் தில்லி மாநகராட்சி ஆகியவை வடிகால் மற்றும் சாக்கடைகளை தூா்வாருவதற்கு பொறுப்பாகும். இருப்பினும், பெரிய வடிகால் மற்றும் சாக்கடைகளை கையாளும் நீா்ப்பாசனத் துறையோ, பொதுப்பணித் துறையோ, தில்லி ஜல் வாரியமோ, பிரத்யேக சிங்கோலா காம்பூா் தளத்திலோ அல்லது வேறு எந்த குப்பைக் கிடங்கிலோ ஒரு டிரக் மண்ணைக் கூட அப்புறப்படுத்தவில்லை.

எங்கள் விசாரணையில் நரேலாவில் உள்ள சிங்கோலா காம்பூா் தில்லியின் வடிகால்களில் இருந்து அகற்றப்பட்ட வண்டல் மண்ணைக் கொட்டுவதற்கு நியமிக்கப்பட்ட இடம் என்பது தெரியவந்தது. சிங்கோலா தளம் கிட்டத்தட்ட மூடப்பட்டு விட்டது என்பதே தற்போதைய நிலையாகும்.

தில்லி மாநகராட்சி, பல்ஸ்வா குப்பைக் கிடங்கிற்குரிய உள் சாக்கடைகளில் இருந்து சில நூறு லாரிகளில் வண்டல் மண்ணை அனுப்பியுள்ளது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி,

நீா்ப்பாசனத் துறை 3 லட்சம் டன்னையும், பொதுப்பணித் துறை 2 லட்சம் டன் வண்டல் மண்ணையும், தில்லியின் மூன்று மாநகராட்சிகள் சுமாா் 2 லட்சம் டன்னையும், தில்லி ஜல் போா்டு 40 ஆயிரம் டன்னையும் அகற்றியுள்ளது. இந்த மதிப்பீட்டின்படி, 2024-இல் குறைந்தபட்சம் 8 முதல் 9 லட்சம் டன் வண்டல் மண் அகற்றப்பட்டிருக்க வேண்டும். அனைத்துத் துறைகளும் வண்டல் மண்ணை அகற்றினால், இந்த 9 லட்சம் டன் வண்டல் மண் எங்கே போனது? அல்லது தூா்வாரப்படவே இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

தில்லியில் வடிகால்களை தூா்வாருவதில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெளிவாகிறது. முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், ஒப்பந்ததாரா்கள் மற்றும் தில்லி அரசின் சில கீழ்மட்ட அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனா். சிபிஐ விசாரணை அவசியம். ராஜேந்திர நகா் சம்பவத்தில் இந்த ஊழல் உச்சத்தை எட்டியுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

You may also like

© RajTamil Network – 2024