தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு- துணை முதல்வர்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாற்காக பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (18.10.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி, திருவண்ணாமலை மாநகரில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1 முதல் 17 ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. டிசம்பர் 10 ஆம் தேதி அன்று, திருத்தேர் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் சுமார் 6 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல, முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா, வருகின்ற டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைக்கு மட்டும் சுமார் 40 லிருந்து 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி, அன்றைய தினம் பக்தர்கள் கூடுகின்ற இடங்களில் முதல்வர் உத்தரவின்பேரில் கள ஆய்வு செய்தோம். அதைத்தொடர்ந்து, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினோம்.

இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன போர் தொடரும்: லெபனான் தூதர்

பக்தர்கள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகமல் இருக்க, குடிநீர் வசதி நடைபாதை வசதி, வடிகால் வசதி, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. மேலும், மக்களின் பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அதிகமாக பொருத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதற்காக முதலுதவி மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடமாடும் கழிப்பறை வசதிகள் உட்பட 400-க்கும்மேற்பட்ட கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதுபோல கிரிவலப்பாதையில் பலர் அன்னதானம் வழங்குவார்கள்.

எனவே, உணவு பாதுகாப்புத்துறை மூலம் உணவின் தரத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மின் விளக்கு வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள், போக்குவரத்துத்துறையின் சார்பில் பேருந்து சேவை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கார்த்திகை தீபத்திருநாளில் பக்தர்கள் பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024