தி.மு.க. அரசு அதிகார பலத்தின் மூலம் தொழிலாளர்களை அடக்கி, ஒடுக்கப் பார்க்கிறது – ஓ.பன்னீர்செல்வம்

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

தொழில் அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொள்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தொழிலாளர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொன்னால் அது மிகையாகாது. தொழிலாளர்களின் உரிமைகளும், அவர்களின் நலன்களும் எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு விரிந்த அளவில் தொழில் பெருகும் என்றார் போறிஞர் அண்ணா அவர்கள். ஆனால், இதற்கு முரணான நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்ச்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில், முறையான ஊதிய உயர்வு எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனை தொழிலாளர்களின் ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டதாகவும், இதனை ஏற்று அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டுமென்று அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அமைச்சர்களின் வேண்டுகோளுக்குப் பிறகும், போராட்டம் தொடர்வதாக சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி தொடர்ந்து போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்த தி.மு.க. அரசு, இரவோடு இரவாக போராட்டப் பந்தலை அகற்றியதோடு, தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று முக்கிய நிர்வாகிகளை கைது செய்ததாகவும், போராட்டக் களத்தில் ஈடுபட்டு வந்தவரை கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தியதாகவும், அதை ஏற்காதவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

இது தொடர்பான வழக்கு, இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை என காவல்துறையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த எவ்விதத் தடையும் இல்லை எனக்கூறி சென்னை ஐகோர்ட்டு வழக்கினை ஒத்திவைத்தது. இதனிடையே போராட்டத்தின்போது காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

ஏற்கெனவே, எட்டு மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக மாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வந்து, தன்னுடைய தொழிலாளர் விரோத மன நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டிய அரசு தி.மு.க. அரசு. நான் உட்பட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் இதனை எதிர்த்தபோது, அதனைப் புறக்கணித்து அந்தச் சட்டத்தை நிறைவேற்றிய அரசு தி.மு.க. அரசு. இருப்பினும், கூட்டணிக் கட்சிகளின் தொடர் வற்புறுத்தலால் அந்தச் சட்டத்தை தி.மு.க. அரசு திரும்பப் பெற்றது. இப்போது, சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில், நிர்வாகத்தினருக்கும், தொழிற் சங்கத்தினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தி.மு.க. அரசு, தன்னுடைய அதிகார பலத்தின்மூலம் தொழிலாளர்களை மிரட்டி, அடக்கி, ஒடுக்கி வைக்கப் பார்க்கிறது. போராடுவது என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை ஒடுக்க நினைப்பது தொழிலாளர் விரோதப் போக்கு, அவர்கள் பெற்ற உரிமையை பறிக்கும் செயல் ஆகும். தொழில் அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொள்கிறது. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க உறுதுணையாக இருக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024