‘துணை முதல்வர்’ என்பது பதவியல்ல; பொறுப்பு.. இணைந்து பணியாற்றுவோம்: உதயநிதி அழைப்பு

‘துணை முதல்வர்’ என்பது பதவியல்ல; பொறுப்பு.. இணைந்து பணியாற்றுவோம்: உதயநிதி அழைப்பு

சென்னை: ‘துணை முதல்வர்’ என்பது பதவியல்ல; பொறுப்பு. இணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழக அமைச்சரவையில் நேற்று (செப்.28) மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்கின்றனர்.

இந்நிலையில், தனக்கு பதவி வழங்கப்பட்டது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் – பொருளாளர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, பெரியார் – அண்ணா – கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதல்வரின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த செந்தில்பாலாஜி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கான இலாகா பின்னர் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

இவரை போலவே, அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள டாக்டர் கோவி.செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் ஆகியோருக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. தமிழக அமைச்சரவை தற்போது 5-வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜம்மு-காஷ்மீர்: மரணத்தின்போதும் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய காவலர்!

பாலியல் வன்கொடுமை: பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இளைஞர்கள்! ரூ.1,000 நிவாரணம்

“எனக்கு துணையாக அல்ல; மக்களுக்கு துணையாக” – துணை முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!