Monday, September 23, 2024

துப்பாக்கி சத்தம், கலவரத்தால் 3 நாட்கள் அவதிப்பட்டோம் – வங்காளதேசத்தில் இருந்து திரும்பிய மாணவிகள் பேட்டி

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

வங்காளதேசத்தில் இருந்து மாணவ-மாணவிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி,

வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர் என்றும், ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வங்காளதேசத்துக்கு படிக்க சென்றிருந்த இந்திய மாணவ-மாணவிகள் அங்கு தவித்தனர். அவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு வருகிறது.

அந்த வகையில் வங்காளதேசத்தில் மருத்துவம் படிக்க சென்று தவித்த தமிழகத்தை சேர்ந்த, 49 மாணவ-மாணவிகள் நேற்று பத்திரமாக ஊர் திரும்பினார்கள். இவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்த ப்ரீதா வாசுதேவன் (பயிற்சி மருத்துவர்), இறுதியாண்டு மாணவிகளான கிருஷ்ணகிரி அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீநிதி ராமமூர்த்தி, ஆலப்பட்டியை சேர்ந்த தக்சன்யா ஜேம்ஸ் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த 4 மாணவ, மாணவிகள், டேம் ரோடு பகுதியை சேர்ந்த 2 பேர், இருமத்தூரை சேர்ந்த ஒருவர், போச்சம்பள்ளியை சேர்ந்த ஒருவர் உள்பட 12 பேர் அடங்குவார்கள். இவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை கிருஷ்ணகிரிக்கு திரும்பினார்கள்.

வங்காளதேசத்தில் இருந்து திரும்பியது குறித்து மாணவிகள் ப்ரீதா வாசுதேவன், ஸ்ரீநிதி ராமமூர்த்தி, தக்சன்யா ஜேம்ஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் வங்காளதேசத்தில் சிலேட் பகுதியில் உள்ள மகளிர் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறோம். இதில், சிலர் மருத்துவம் முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராகவும் உள்ளனர். எங்கள் கல்லூரியில் மட்டும் இந்தியாவை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

கடந்த 17-ந் தேதி வங்காளதேசத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி பரவியது. இதன் விவரங்கள், கலவரங்கள் குறித்து முழுமையாக தெரிவதற்குள் அங்கு இணையதளம் முடங்கியது. மொபைல் உள்பட அனைத்து தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

நாங்கள் தங்கி இருந்த விடுதி யில் உணவு கூட வழங்கப்படவில்லை. உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டது. நாங்களே உணவு தயார் செய்தவாறு விடுதியில் தங்கியிருந்தோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கலவரம் தீவிரமடைந்ததை துப்பாக்கி சத்தம் மற்றும் கலவர வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டோம். எங்கள் பெற்றோரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கள் விடுதியில் இருந்த மாணவி தக்சன்யாவின் மொபைலில் மட்டும் அதிர்ஷ்டவசமாக டவர் கிடைத்தது. அந்த மொபைல் மூலம், 60 மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் பேசி தகவல் தெரிவித்தனர்.

அச்சத்துடன் இருந்த எங்களை விடுதி, கல்லூரி நிர்வாகிகள் எவ்வளவு விரைவாக இங்கிருந்து செல்ல முடியுமோ செல்லுங்கள், நிலைமை மோசமாக உள்ளது என்று கூறினார்கள். இதனால் நாங்கள் மேலும் பதற்றம் அடைந்தோம். டி.வி.யில் பார்த்த ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவு தூதரக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் உடனடியாக எங்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பெயர், விவரங்களை மட்டும் கேட்டனர். அதன் பின் தமிழக அரசு உதவியோடு, எங்களது பாஸ்போர்ட் விவரங்கள் முதல் விமான டிக்கெட் வரை அவர்களே ஏற்பாடு செய்தனர்.

கடந்த, 20-ந் தேதி மதியம் 3 மணியளவில் சிலேட் பகுதியிலிருந்து கிளம்பிய நாங்கள், சிலாங், தமாபில், தவுகி எல்லை வழியாக கவுகாத்திக்கு ராணுவ பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டோம். நேற்று முன்தினம் கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் நாங்கள் சென்னை வந்தோம். எங்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

பின்னர் சென்னையில் எங்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, அங்கிருந்து தமிழக அரசின் சார்பில் வாகனம் மூலமாக கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்து எங்களின் பெற்றோரிடம் பத்திரமாக சேர்த்தனர். 3 நாட்கள் துப்பாக்கி சத்தம், கலவர பீதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவிய மத்திய-மாநில அரசுகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

You may also like

© RajTamil Network – 2024