Friday, September 20, 2024

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இந்தியா

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 205 ரன்கள் எடுத்தார்.

சென்னை,

இந்தியா – தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்த இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.மந்தனா 149 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய சுபா சதீஷ் 15 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.

இதில் நிதானமாக ஆடிய ஷபாலி இரட்டை சதம் அடித்த நிலையில் 205 ரன்னிலும், ஜெமிமா 55 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 525 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்னுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 205 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டெல்மி டக்கர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தற்போது வரை 30 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024