Saturday, September 21, 2024

தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ‘டிரா’

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 357 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 233 ரன்னும் எடுத்தன.

இதையடுத்து 124 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து 154 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டோனி டி ஜோர்ஜி 14 ரன்னுடனும், எய்டன் மார்க்ரம் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், 5ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 29 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிராத்வைட் ரன் எடுக்காமலும், மிகைல் லூயிஸ் 9 ரன்னும் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய கீசி கார்டி 31 ரன், அலிக் அத்தானாஸ் 92 ரன், கவேம் ஹாட்ஜ் 29 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56.2 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் சமனில் (டிரா) முடிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி கயானாவில் தொடங்குகிறது.

You may also like

© RajTamil Network – 2024