தெய்வங்களின் புகைப்படம், பெயர்… ஆதார் அட்டையை போல் பேனர் வைத்த பக்தர்கள்

by rajtamil
0 comment 31 views
A+A-
Reset

பேனரில் தெய்வங்களின் பிறந்த தேதியில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பொம்மணம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த காளியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். அம்மன் பூஞ்சோலை சென்று அடையும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.

இன்றைய காலத்தில் பேனா் கலாசாரம் கொடிகட்டி பறக்கிறது என்பதை மறுக்க முடியாது. எந்தவொரு சிறிய நிகழ்ச்சி என்றாலும், பேனர்களை வைத்து அலங்கரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. காண்போரை கவரும் வகையில் பல்வேறு வாசகங்கள் மற்றும் தோற்றத்தில் பேனர்கள் வைக்கப்படுகிறது.

அந்த வகையில் பொம்மணம்பட்டியில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சார்பில் பல்வேறு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு பேனர், அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது. அதாவது ஆதார் அட்டை போல் அந்த பேனர் இடம்பெற்றிருந்தது.

அந்த பேனரில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன், கன்னிமார், நாகம்மாள், வெற்றி விநாயகர் ஆகிய தெய்வங்களின் படங்கள் இருந்தன. மேலும் அந்த தெய்வங்களின் பிறந்த தேதியில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுமட்டுமின்றி வட்டம், மாவட்டம், ஆதார் எண், இணையதள முகவரி, பார்கோடு மற்றும் ஆதாரம் எங்க ஊரு, எங்க ராஜ்ஜியம் என்று அச்சிடப்பட்டிருந்தது. 6 தெய்வங்களின் ஆதார் அட்டைகளை ஒருங்கிணைத்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்த அனைத்து பக்தர்களின் கவனத்தையும், ஆதார் போல் இடம் பெற்றிருந்த வினோத பேனர் ஈர்த்தது.

You may also like

© RajTamil Network – 2024