Friday, September 20, 2024

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியாகின. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 இடங்களில் 240 தொகுதிகளை மட்டுமே அந்த கட்சியால் கைப்பற்ற முடிந்தது.

அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது. ஆட்சியமைக்க தேவையான 272-க்கு அதிகமான உறுப்பினர்களை இந்த அணி பெற்றதால் அடுத்த 5 ஆண்டு களுக்கு கூட்டணி ஆட்சி நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது.

பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் மோடியே 3-வது முறையாக ஆட்சியமைக்க தங்கள் ஆதரவை அளித்தனர். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை ஒரு மனதாக அவர்கள் தேர்வு செய்தனர். இதற்கிடையே புதிய மந்திரி சபையில் யார் யாருக்கு இடமளிப்பது என்பது குறித்து இந்த கட்சி தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில் பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மத்திய அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள், தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு அங்கிருந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் தங்கள் தலைவராக (பிரதமர்) மோடி தேர்வு செய்யப்படுகிறார். அதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார்.

அப்போது, தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதியிடம் மோடி வழங்குகிறார். அத்துடன் புதிய அரசு அமைப்பதற்காக உரிமையும் கோருகிறார். அதை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடியை புதிய அரசு அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்கிறது.

பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்குப்பின், தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகும் வாய்ப்பை மோடி பெற்றிருப்பதை பா.ஜனதாவினர் கொண்டாடி வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024