தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் எதிரொலி; அதிரடியாக உயர்ந்த பங்கு சந்தைகள்

by rajtamil
0 comment 51 views
A+A-
Reset

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு பின் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், பா.ஜ.க. இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்றும் பா.ஜ.க. ஆட்சியமைக்க கூடும் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய பங்கு சந்தைகள் இன்று லாப நோக்குடன் உயர்ந்து காணப்பட்டது. இதன்படி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 2,622 புள்ளிகள் (3.5 சதவீதம்) அளவுக்கு உயர்ந்து இதுவரை இல்லாத அளவில் 76,583 புள்ளிகளாக காணப்பட்டது.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 807 புள்ளிகள் வரை உயர்ந்து, 23,337 புள்ளிகளாக காணப்பட்டது.

சென்செக்ஸ் குறியீட்டில், பவர் கிரிட், எல் அண்டு டி, என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி, எம் அண்டு எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் அல்டிராடெக் சிமெண்ட் ஆகியன லாபத்துடன் காணப்பட்டன. இந்த நிறுவனங்களின் பங்குகள் 3 சதவீதம் முதல் 7 சதவீதம் அளவுக்கு உயர்ந்து இருந்தன.

நிப்டி குறியீட்டில், பொது துறை வங்கி குறியீடு 5 சதவீதம் அளவுக்கும், ரியல் எஸ்டேட் துறை 4 சதவீதம் அளவுக்கும், வங்கி துறை 3 சதவீதம் அளவுக்கும் உயர்ந்து, அதுசார்ந்த நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.

You may also like

© RajTamil Network – 2024