அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்விக்குப் பின்னர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 277 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலமாக 2-வது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 224 தொகுதிகளில் வென்றுள்ளார்.
தோல்விக்கு பின்னர் கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் கமலா ஹாரிஸ் ஆற்றிய உரையில், “இந்தத் தேர்தலின் முடிவு நாம் விரும்பியது அல்ல. ஆனால் நான் சொல்வதைக் கேளுங்கள். அமெரிக்காவின் வாக்குறுதியின் ஒளி எப்போதும் பிரகாசமாக எரியும்.
இந்தத் தேர்தல் முடிவை நான் ஒப்புக் கொண்டாலும், தேர்தல் பிரசாரத்தில் தூண்டப்பட்ட சண்டையை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
இந்த தோல்விக்காக யாரும் விரக்தியடைய வேண்டாம். நாம் தொடர்ந்து போராடுவோம்.
நாம் இருண்ட காலத்திற்குள் நுழைவதாக பலர் உணர்வதை நான் அறிவேன். ஆனால், நம் அனைவரின் நலனுக்காக அது அவ்வாறு இருக்காது என நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | அமெரிக்க பிரதிநிதிகள் சபை தோ்தலில் வெற்றிபெற்ற 6 இந்திய வம்சாவளியினா்
டொனால்ட் டிரம்பை ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல் என்று விமர்சித்த கமலா ஹாரிஸ் அவரது வெற்றிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த அவர், இந்தத் தோல்வியினால் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
ஜோ பிடன் ஆட்சியில் ஏற்பட்ட பணவீக்கம், பொருளாதாரத்தில் சரிவு போன்றவை ஜனநாயகக் கட்சியின் தோல்விக்கான காரணமாக சொல்லப்படுகிறது.