பெங்களூரு,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் பா.ஜனதா தனித்து 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 'இந்தியா' கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும்.
இந்நிலையில் தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது என்றும், மக்கள் ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டனர் என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-
"ராகுல் காந்தி மேற்கொண்ட இரண்டு யாத்திரைகளும் நல்ல பலனை தந்துள்ளன. நாட்டின் மக்கள் காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் மிகப்பெரிய ஆதரவுடன் ஏற்றுக்கொண்டனர். ராகுல் காந்தி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தனது கையில் அரசியலமைப்பு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்தார்.
இந்த தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், அவர்களின் வாக்கு சதவிகிதம் குறைந்துவிட்டது. அவர்களால் தனி பெரும்பான்மையை பெற முடியவில்லை. தற்போது மோடி அலை எங்கேயும் காணப்படவில்லை. இந்த தேர்தல் முடிவு மோடியின் புகழை அழித்துவிட்டது.
தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் மோடி வாக்கு சேகரித்தார். மேலும் மற்ற மதங்களுக்கு எதிராக பேசி வந்தார். காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை பறித்துவிடும் என்று அவர் பொய்யான பிரசாரத்தை செய்தார். அப்படி இருந்தும் அவரால் பெரும்பான்மையை பெற முடியவில்லை. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 64 இடங்களில் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. இது பா.ஜ.க.விற்கு தேசிய அளவில் கிடைத்துள்ள தோல்வி ஆகும்."
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.