தேவையில்லாமல் குண்டர் சட்டம்; இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா? – தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், நீதிபதி வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பதிலளிக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

இதன்படி இன்று கோர்ட்டில் ஆஜராகி விளக்கமளித்த அசன் முகமது ஜின்னா, இடைக்கால ஜாமின் வழங்க கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதாகவும், ஆனால் ஒவ்வொரு வழக்கிற்கும் இது மாறுபடும் எனவும் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேவையில்லாமல் குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும், தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா? எனவும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அசன் முகமது ஜின்னா, அவ்வாறு எதுவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தார். மேலும், தேவையில்லாமல் குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என டி.ஜி.பி.க்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதாகவும், தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து, குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும் என தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பொதுமக்கள் அச்சமின்றி காவல் நிலையத்தை அணுகும் சூழலை உருவாக்க வேண்டும் என தெரிவித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024