தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 15 ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய தி.மு.க. அரசு மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழகத்திலுள்ள 109 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை நேர வகுப்புகள் மற்றும் மாலை நேர வகுப்புகள் என இரண்டு சுழற்சி முறையிலும் ஏறத்தாழ 4,000-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் இவர்களுக்கான பணி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மாதந்தோறும் தொகுப்பு ஊதியமாக ரூ.25,000 வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மானியக்குழு ரூ.50,000 அளவுக்கு கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்த கடந்த பத்தாண்டுகளில் மூன்றுமுறை பரிந்துரை செய்தும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் தி.மு.க. அரசு அதனை இதுவரை ஏற்கவில்லை.

கொரோனோ பெருந்தொற்றுக் காலம் உட்பட வகுப்புகள் நடைபெறாதபோதும் கல்லூரிகளில் வழமையான மற்ற அனைத்துப் பணிகளையும் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றனர். தேசிய தகுதித்தேர்வு, மாநிலத்தகுதித்தேர்வு இரண்டிலும் சிந்தனை உளி கொண்டு செதுக்கி அறிவார்ந்த திறன்மிக்கத் தலைமுறையை உருவாக்கி தேசத்தின் வருங்காலத்தைத் தீர்மானிப்பவர்களாகத் திகழக்கூடிய அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய மறுப்பது மிகுந்த மனவேதனையளிக்கிறது.

அது மட்டுமின்றி, தி.மு.க. அரசு தற்போது அரசு கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு புதிதாக போட்டித் தேர்வினை அறிவித்து இத்தனை ஆண்டுகாலம் பணியாற்றிய கவுரவப் பேராசிரியர்களின் ஈகத்தைத் துளியும் மதியாது தூக்கி எறிந்துள்ளது. பணி நிரந்தரம் என்று வாக்குறுதி அளித்துக் குறைந்த ஊதியம் கொடுத்து அவர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டுத் தற்போது நிரந்தரப் பணிகளுக்கு வேறு ஆட்களைத் தேர்வு செய்வதென்பது பச்சைத்துரோகமாகும். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிடும்.

தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பேராசிரியர் பெருமக்களே முனைவர் பட்டம் பெற்றவர்களாக, ஆய்வியல் நிறைஞராக, தேசிய – மாநிலத் தகுதித் தேர்வுகளில் வென்றவர்களாக, எல்லாவற்றையும் விட ஆசிரியர் பணியில் நீண்டகால அனுபவம் பெற்றவர்களாக உள்ள நிலையில் அவர்களைவிட உதவிப்பேராசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் யார்?

ஆகவே, தி.மு.க. அரசு அரசுக்கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்குப் புதிதாகப் போட்டித்தேர்வு வைப்பதைக் கைவிட்டு, 15 ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களையே பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024