தொடரும் கனமழை: வெள்ளக்காடான மணிப்பூர்; 3 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

by rajtamil
Published: Updated: 0 comment 59 views
A+A-
Reset

இம்பால்,

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 25-ந் தேதி புயலாக உருமாறியது. 'ராமெல்' என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து மேற்குவங்காளம் மற்றும் வங்கதேசம் இடையே 26-ந் தேதி இரவு கரையை கடந்தது.

அப்போது மணிக்கு சுமார் 135 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. புயலை தொடர்ந்து கனமழை கொட்டியது. இதில் மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு புயல் மற்றும் கனமழைக்கு பலர் பலியாகினர்.

இதனிடையே 'ராமெல்' புயல் காரணமாக மிசோரம், மணிப்பூர், அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

கனமழையை தொடர்ந்து அந்த மாநிலங்களில் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மிசோரமின் தலைநகர் ஐஸ்வாலில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகினர். அந்த மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 12 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல் அசாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு பலர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

தொடரும் கனமழை

இந்த நிலையில் ராமெல் புயலின் தாக்கம் ஓய்ந்த பிறகும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.

இதனால் மாநிலத்தின் முக்கிய ஆறுகளான நம்புல், இம்பால், இரில், கொங்பா, நம்போல் உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இடைவிடாது கொட்டும் மழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்கடாகி உள்ளன. குறிப்பாக இம்பால் பள்ளத்தாக்கு பகுதி வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

அங்குள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவால் பல நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மணிப்பூர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 80 வயது மூதாட்டி உள்பட 3 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மழை தொடர்வதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் ராணுவ வீரர்கள், அசாம் ரைபிள் படை வீரர்கள், மாநில போலீசார் மற்றும் தேசிய பேரிடர் குழுவினர் ஆகியோர் குழுவாக இணைந்து மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருவதாகவும், தலைநகர் இம்பாலில் சிக்கி தவித்த சுமார் 1,000 பேரை பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளதாகவும் அசாம் ரைபிள் படை தெரிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024