Saturday, September 21, 2024

தொல்லியல் பணிக்கு சம்ஸ்கிருதம் கட்டாயமா? – அறிவிப்பை திரும்பபெற சீமான் வலியுறுத்தல்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

தொல்லியல் பணிக்கு சம்ஸ்கிருதம் கட்டாயமா? – அறிவிப்பை திரும்பபெற சீமான் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசின் தொல்லியல்துறை பணிக்கு சம்ஸ்கிருதம் கட்டாயம் எனும் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்ப பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிப்பில் சம்ஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சம்ஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழகத்தின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது. அதேபோல தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அப்படி ஒரு மொழி இருக்கிறதா? இதை முதல்வர் தான் விளக்க வேண்டும். தமிழ்மொழி என்று குறிப்பிடுவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? தெருக்களின் பெயர்களில் தமிழ் வரவே இத்தனை ஆண்டுகாலம் ஆகியுள்ள நிலையில், தமிழக அரசுப் பணிகளிலிருந்து அன்னைத் தமிழை அகற்ற திமுக அரசு முனைவது கொடுமையாகும்.

இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? இதன்மூலம் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா? அல்லது மனுநீதியா? எனவே தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சம்ஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

You may also like

© RajTamil Network – 2024