Saturday, September 21, 2024

தொழில்நுட்ப கோளாறு: சென்னை மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

தொழில்நுட்ப கோளாறு: சென்னை மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விம்கோ நகர் – விமானநிலையம் உள்பட இரண்டு மார்க்கங்களில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை மதியம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சென்ட்ரல் – விமானநிலையம் இடையே வழித்தடத்தில் நேரடி மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.

சென்னையில் விம்கோ நகர் – விமானநிலையம் வரையிலான வழித்தடம், சென்ட்ரல் – பரங்கிமலை வரையிலான வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் காலை, மாலையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த நேரங்களில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், விம்கோநகர் – விமானநிலையம் வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.50 மணிக்கு திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விம்கோநகர் – விமானநிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

உடனடியாக, மெட்ரோ ரயில் பொறியாளர்கள், பணியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், பொறியாளர்கள் விரைந்து வந்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், இந்த வழித்தடங்களில் 15 முதல் 20 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் என தாமதமாக இயக்கப்பட்டது. இந்த ரயில்களும் ஆங்காங்கே 5 முதல் 10 நிமிடம் வரை ஒவ்வொரு நிலையத்திலும் நின்று சென்றது. மேலும், சென்ட்ரல் – விமானநிலையம் இடையே பச்சை தடத்தில் நேரடி மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன்விளைவாக, சென்ட்ரல் – பரங்கிமலை, விம்கோ நகர் – விமானநிலையம் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை மதியம் 1.35 மணிக்கு சீரானது. தொடர்ந்து, மதியம் 2.10 மணிக்கு தொழில்நுட்பகோளாறு முற்றிலுமாக சரிசெய்யப்பட்டது. இதையடுத்து, சென்ட்ரல் – விமானநிலையம் இடையே நேரடி சேவை வழக்கம்போல தொடங்கியது. மெட்ரோ ரயில் சேவை பாதிப்பால், பயணிகள் ஒரு மணி நேரம் சிரமத்தை சந்தித்தினர்.

You may also like

© RajTamil Network – 2024