ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மெகா ஏலத்துக்கு முன்பாக, அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டு, அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டனர்.
நவம்பர் 24 & 25-ல் மெகா ஏலம்
அனைத்து அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெடா நகரில் நடைபெறும் பிசிசிஐ தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஐபிஎல் ஏலத்துக்கான வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (திங்கள் கிழமை) அதிகாரபூர்வமாக நிறைவடைந்தது. இதுவரை 1,574 வீரர்கள் (1,165 இந்திய வீரர்கள், 409 வெளிநாட்டு வீரர்கள்) தங்களது பெயர்களை ஏலத்தில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: எம்.எஸ்.தோனி குறித்து மனம் திறந்த ரிக்கி பாண்டிங்!
ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் உள்பட அதிகபட்சமாக 25 வீரர்கள் கொண்ட அணியை அமைக்க முடியும். இந்த மெகா ஏலத்தின் மூலம் 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர்.
ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற முக்கிய வீரர்களை அணிகள் விடுவித்துள்ளதால், மெகா ஏலத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
10 அணிகளும் மொத்தமாக ரூ.641.5 கோடியுடன் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள உள்ளன. இந்த ரூ.641.5 கோடி 204 வீரர்களுக்காக செலவிடப்படவுள்ளது. மொத்தம் ஏலத்தில் எடுக்கப்படவுள்ள 204 வீரர்களில் 70 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.
இதையும் படிக்க: கே.எல்.ராகுலை அழுத்தத்தில் வைத்திருக்க விரும்பும் ஆஸி. வீரர்!
இதுவரை 10 அணிகளும் ரூ.558.5 கோடி செலவில் 46 வீரர்களை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.