நாகை: இழப்பீட்டு தொகை கோரி சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நாகை: இழப்பீட்டு தொகை கோரி சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம்

நாகப்பட்டினம்: சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டு தொகை வழங்காமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து, சிபிசிஎல் நிறுவன நுழைவாயில் முன்பு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளது.

இதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. 620 ஏக்கர் விவசாய நிலம் பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை ) வழங்காததை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு, வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம், கடந்த மே 11-ம் தேதி இரவு பகல் தொடர் உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடத்தப்பட்ட அமைதிப் பேச்சு வார்த்தையில் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் R&R இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டம் அப்போது வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் கொடுத்த உத்தரவாதம் இதுவரை நிறைவேற்றப்படாததால், சிபிசிஎல் நிர்வாகத்தை கண்டித்து சிபிசிஎல் நுழைவாயில் முன்பு நரிமணம், பனங்குடி, கோபுராஜபுரம் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி பாலகிருஷ்ணன், நாகூர் காவல் ஆய்வாளர் சிங்காரவேல் மற்றும் வட்டாட்சியர் ராஜா உள்ளிட்டோர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். R&R குழுவில் கையெழுத்து இடாத நபர்களை விரைவில் கையெழுத்து இட வைத்து அனைவருக்கும் பணப் பலன்களை பெற்றுத் தருவதாக தெரிவித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விளக்கிக் கொள்ளப்பட்டது.

போராட்டம் காரணமாக ஏராளமான போலீஸார் சிபிசிஎல் நிறுவனம் அருகே குவிக்கப்பட்டிருந்ததால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. முற்றுகை போராட்டத்தின் காரணமாக சிபிசிஎல் நிறுவனத்திற்குள் செல்ல வேண்டிய வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. போராட்டம் கலைந்த பிறகே அவை உள்ளே சென்றன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024