நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் – தே.மு.தி.க.வின் நிலை என்ன..?

by rajtamil
Published: Updated: 0 comment 32 views
A+A-
Reset

போட்டியிடும் அனைத்து கட்சிகளையும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் கமிஷன் ஏற்பதில்லை.

சென்னை,

இந்தியாவில் தேர்தல் கமிஷனால் நடத்தப்படும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகியவற்றில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆனாலும் போட்டியிடும் அனைத்து கட்சிகளையும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் கமிஷன் ஏற்பதில்லை. தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படுவதற்கு பல்வேறு விதிகள் வகுத்தளிக்கப்பட்டு உள்ளன.

அந்த விதிகள், நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் வித்தியாசப்படும். அதுபோல அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், அந்த அங்கீகாரத்தை இழப்பதற்கும் விதிகள் உள்ளன.

தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படும் கட்சிகள், கூடுதல் அந்தஸ்து பெற்ற கட்சிகளாக கருதப்படும். பல்வேறு ஆலோசனைகளைப் பெறுவதற்கு அந்த கட்சிகளை தேர்தல் கமிஷன் அழைக்கும். மேலும், அந்த கட்சிகளின் சின்னம் நிலையானதாக இருக்கும். ஆனால் அங்கீகாரம் பெறாத மற்ற கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற அளவில் மட்டுமே கருதப்படும்.

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்த அளவில், மாநிலத்தில் ஒரு கட்சி ஒரே சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, அந்தக் கட்சி குறைந்தது 8 சதவீதம் வாக்குகளை அந்த தேர்தலில் பெற்றிருக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம்

இந்த நிபந்தனைகளை நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் பூர்த்தி செய்துள்ளன. எனவே அவை தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படும் மாநிலக் கட்சிகளுக்கான தகுதியை பெற்றதாக கருதப்படுகின்றன. 2 கட்சிகளுக்குமே அங்கீகரிக்கப்படுவதற்கான தகுதியை பெறுவது இதுவே முதன்முறையாகும்.

இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தங்களுக்கென்று பானைச் சின்னத்தை பெற்றது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தொல்.திருமாவளவன் ஒரு லட்சத்திற்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதுபோல, விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார், 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் வென்றார். மேலும், அந்தக் கட்சி 2 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகளை பெற்றுள்ளது. ஒரே சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற விதியின்படி தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை பெறும் தகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.

இதேபோல் நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறா விட்டாலும் சராசரியாக 8.2 சதவீத ஓட்டுகளை பெற்று தன்னை தகுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

தே.மு.தி.க.வின் நிலை?

தேர்தல் விதிகளின்படி கூறப்பட்டுள்ள ஓட்டு சதவீதம் உள்ளிட்ட அங்கீகாரத் தகுதியை ஒரு கட்சி இழந்தாலும், அடுத்த 2 தேர்தல்களுக்குள் அந்தத் தகுதியை பெற்றுவிட்டால் அது மீண்டும் அங்கீகாரம் பெற்ற கட்சியாக கருதப்படும். ஆனால் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கட்சி அந்தத் தகுதியை இழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

அங்கீகாரம் பெற்ற கட்சியாக அறிவிக்கப்படுவதற்கும், தகுதி இழப்பு செய்யப்படுவதற்கும் பல சட்டரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன் பிறகே அதுபற்றிய உறுதியான அறிவிப்பு வெளியாகும்.

You may also like

© RajTamil Network – 2024