நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபங்களின் திருநாள் என்றழைக்கப்படும் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை பரிமாறியும் பண்டிகையை கொண்டாடுவர். மேலும், உறவினர்களின் இல்லங்கள் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்றும் பண்டிகையை கொண்டாடுவர்.
அந்தவகையில் இன்று அதிகாலை முதலே புத்தாடை அணிந்து மக்கள் பட்டாசு வெடித்தும் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
கோயில்களில் சிறப்பு தரிசனம்
தீபாவளியையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. தீபாவளியையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருச்செந்தூர், பழனி, ஆகிய கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்துவந்தனர்.
சென்னையில் வடமழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இறைச்சி கடைகளில் கூட்டம்
தீபாவளியையொட்டி அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பட்டாசு, இனிப்புகளுக்கு அடுத்தபடியாக இறைச்சி எடுத்து சமைத்து உண்பது முக்கியத்துவம் பெறுவதால், இறைச்சி கடைகளில் அதிகாலை முதலே கூட்டம் அதிகரித்திருந்தது.
பேருந்து, ரயில் நிலையங்கள், சந்தை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.