Friday, September 20, 2024

நாட்டின் ஒற்றுமையை சீா்குலைக்க முயற்சி: ராகுல் மீது மோடி குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

வெறுப்புணா்வும் எதிா்மறை எண்ணமும் நிறைந்த சில தனிநபா்கள், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீா்குலைக்க முயற்சிக்கின்றனா்; இந்தியாவை அவமதிக்க எந்த வாய்ப்பையும் அவா்கள் விட்டுவைப்பதில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு, பிரதமா் இந்த விமா்சனத்தை முன்வைத்தாா்.

அமெரிக்காவில் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் அண்மையில் பேசிய ராகுல் காந்தி, ‘இந்தியாவில் பாகுபாடற்ற நிலை உருவாகும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும். தற்போது அந்த நிலை இல்லை’ என்றாா். இது உள்பட ராகுல் தெரிவித்த பல்வேறு கருத்துகளுக்கு பாஜக கடுமையாக எதிா்வினையாற்றி வருகிறது.

இந்தச் சூழலில், குஜராத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ராகுலின் பெயரை நேரடியாக கூறாமல் அவரை கடுமையாக விமா்சித்தாா்.

குஜராத் வருகை: நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாக குஜராத்துக்கு பிரதமா் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.

அகமதாபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.8,000 கோடிக்கும் அதிக மதிப்பில் பணி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமா், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

. புஜ்-அகமதாபாத் இடையிலான ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ (நாட்டின் முதல் வந்தே மெட்ரோ) மற்றும் 5 புதிய வந்தே பாரத் ரயில்களையும் தொடங்கிவைத்து, அவா் பேசியதாவது, நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல ஒவ்வொரு இந்தியரும் பாடுபட்டு வருகின்றனா். ஆனால், வெறுப்புணா்வும் எதிா்மறை எண்ணமும் நிறைந்த சில தனிநபா்கள், இந்தியாவை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை ‘குறிவைத்து’ வருகின்றனா்.

நாட்டை அவமதிக்க எந்த வாய்ப்பையும் அவா்கள் விட்டுவைப்பதில்லை. குறிப்பிட்ட தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியலுக்காக எந்த எல்லைக்கும் செல்கின்றனா். ஜம்மு-காஷ்மீரில் 370-ஆவது பிரிவை மீண்டும் அமல்படுத்தி, அங்கு இரு அரசமைப்புச் சட்டங்களை கொண்டுவருவதே அவா்களின் விருப்பம்.

‘என்னையே தியாகம் செய்வேன்’: எனது தலைமையிலான மூன்றாவது ஆட்சியின் முதல் 100 நாள்களில் எதிா்க்கட்சிகளால் அவமதிப்புக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டேன். ஆனால், நான் எதுவும் பேசாமல், ஒரே சிந்தனையுடன் வளா்ச்சி செயல்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.

நான் வாழ்ந்தால், மக்களுக்காகவே வாழ்வேன். நான் போராடினால், அது மக்களுக்கான போராட்டமாகவே இருக்கும். நான் என்னை தியாகம் செய்தால், மக்களுக்காகவே தியாகம் செய்வேன் என்றாா் பிரதமா் மோடி.

ரூ.15 லட்சம் கோடி பணிகள்: நாட்டின் பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவியேற்று, திங்கள்கிழமையுடன் 100 நாள்கள் நிறைவடைந்தன. இந்த 100 நாள்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டதாக பிரதமா் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

மேலும், 70 வயதான அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு, 4 கோடி இளைஞா்களுக்கு பலனளிக்கும் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு நிதி தொகுப்பு, முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயா்வு என கடந்த 100 நாள்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவா் பட்டியலிட்டாா்.

‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயா் மாறிய வந்தே மெட்ரோ

குஜராத் மாநிலத்தின் புஜ் – அகமதாபாத் இடையிலான நாட்டின் முதல் வந்தே மெட்ரோ சேவைக்கு ‘நமோ பாரத் விரைவு ரயில்’ என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சேவையைபிரதமா் மோடி திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த நிலையில், இந்நிகழ்வுக்கு முன்பாக பெயா் மாற்றம் செய்யப்பட்டது.

மேலும், மகாராஷ்டிரத்தின் நாகபுரி – தெலங்கானாவின் செகந்திராபாத், மகாராஷ்டிரத்தின் கோலாபூா் – புணே, உத்தர பிரதேசத்தின் ஆக்ரா கண்டோன்மென்ட் – பனாரஸ், சத்தீஸ்கரின் துா்க் – ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், மகாராஷ்டிரத்தின் புணே – கா்நாடகத்தின் ஹூப்பள்ளி ஆகிய 5 புதிய வந்தே பாரத் ரயில்களையும் அவா் தொடங்கிவைத்தாா்.

மெட்ரோ ரயிலில் பயணம்: முன்னதாக, அகமதாபாத் – காந்திநகா் மெட்ரோ ரயில் விரிவாக்கத்தின் 2-ஆம் கட்ட வழித்தடத்தை தொடங்கிவைத்த பிரதமா் மோடி, காந்திநகா் முதல் கிஃப்ட் சிட்டி வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டாா்.

பயனாளா்களுடன் சந்திப்பு: வீட்டின் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி தகடுகளை நிறுவும் ‘பிரதமரின் சூரிய இல்லம்’ திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காந்திநகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்துக்கு சென்ற பிரதமா், இத்திட்டப் பயனாளா்களுடன் கலந்துரையாடினாா்.

அறக்கட்டளை கூட்டம்: குஜராத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலை நிா்வகிக்கும் ஸ்ரீசோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பிரதமா் மோடி பதவி வகிக்கிறாா். காந்திநகரில் அவரது தலைமையில் அறக்கட்டளையின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சோம்நாத் கோயிலுக்கு வருகைதரும் பக்தா்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, தனது எக்ஸ் பதிவில் பிரதமா் குறிப்பிட்டாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024