நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பெருமிதம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பெருமிதம்

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.

சென்னை துறைமுகம் சார்பில், ‘நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் சக்தியை பயன்படுத்துதல்’ என்றநிகழ்ச்சியும் பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தூய்மைப்பணி தொடக்க விழாவும் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில், சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவர்சுனில் பாலிவால் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ‘அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு இன்று பெண்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இதன்மூலம், வரும் 2047-ம்ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும். இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குறிப்பாக, அன்னையர்கள் கொண்டாடப்படுகின்றனர். அனைவரும் தங்களது அன்னையர்களை போற்றும் விதமாக ஒரு மரம் நட வேண்டும்’ என்றார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் பேசும்போது, ‘நாட்டின் முக்கிய துறைகளில் இன்றைக்கு பெண்கள் பங்களித்து வருகின்றனர். குறிப்பாக, கப்பலில் சிப்பந்திகளாக பெண்கள் பணிபுரிகின்றனர். நமது கலாச்சாரம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது’ என்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் பேசியதாவது: சென்னை துறைமுகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒருவரது வாழ்க்கை தூய்மையாக இருக்கும்போது, சமூகமும் தூய்மைபெறும். நாட்டை தூய்மையாக வைத்திருக்க அனைவரும் பங்களிக்க வேண்டும். பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியாவின் பெருமையும், வலிமையும் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 5டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடையும். இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில், அண்மையில் பாரீஸ் நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு ரூ.2 லட்சமும், வெண்கல பதக்கம் வென்ற மணிஷா ராமதாஸுக்கு ரூ.1 லட்சமும் ரொக்கப் பரிசாக அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காமராஜர் துறைமுக மேலாண் இயக்குநர் ஐரீன் சிந்தியா, சென்னை துறைமுக துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், இந்தியக் கடல்சார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாலினி வி.சங்கர், நாட்டின் முதல் கடல்சார் பொறியாளர் சோனாலி பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024