Tuesday, September 24, 2024

நாட்டியமாடிய பத்மினி, நடிகையானது எப்படி?

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

தமிழ்த் திரைப்பட உலகின் நாட்டியப் பேரொளியாக ஜொலித்தவர் நடிகை பத்மினி.

தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என சுமார் 250 படங்களுக்கும் அதிகமாக நடித்தவர் பத்மினி. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையாக நடத்திருக்கிறார். இந்தக் கால மொழியில் சொல்லப் போனால் இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்திருக்கிறது.

திருவனந்தபுரத்தில் பிறந்த பத்மினியின் குடும்பத்தினர் எல்லாம் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தின் உறவுகள். தொடக்கத்தில் நாட்டிய நிகழ்ச்சிகள் மட்டுமே நிகழ்த்திக் கொண்டிருந்தனர் பத்மினி சகோதரிகள். திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு வெற்றிகரமாக வலம் வந்தார் பத்மினி. நடிப்பில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே திடீரென திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து விலகிய பத்மினி, கணவரின் மறைவுக்குப் பின்னர் மறுபடியும் நடிக்க வந்தார்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றைப் பேசும்போது, தில்லானா மோகனாம்பாளைப் பேசாமல் இயலாது; சண்முகசுந்தரமாக சிவாஜி கணேசனும் மோகனாங்கியாக பத்மினியும் வாழ்ந்திருப்பார்கள்.

1982 செப்டம்பரில் சினிமா எக்ஸ்பிரஸுக்கு அளித்த ஒரு நேர்காணலில் தன் திரைக் கதையைப் பகிர்ந்திருக்கிறார் பத்மினி.

“அம்மாவின் மூத்த சகோதரி கார்த்தியாயினி அம்மாள்தான் மிகவும் ஆவலுடன் எங்களுக்கு நாட்டியம் கற்பித்தார். அப்போது அரச குடும்பத்துக்குப் பெண்களுக்கு நாட்டியம் சொல்லிக் கொடுப்பதற்காக குரு கோபிநாத் வரவழைக்கப்பட்டார். மகாராணியும் சர் சி.பி.யும் இந்தக் கலையை வளர்க்க வேணடும் என்ற ஆர்வத்தில் இந்த ஏற்பாடுகளைச் செய்தனர்.

“எங்கள் பெரியம்மாவுக்கு நாங்கள் நாட்டியத்தில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும் என்று பெரிய ஆவல். திருவிடைமருதூரிலிருந்து நடன ஆசிரியர் மகாலிங்கம் பிள்ளை வந்து எங்களுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்தார்.

நான் நான்கு வயதிலேயே மேடையேறி நாட்டியமாடினேன். அப்பொழுதெல்லாம் விடுமுறைக்குச் சென்னைக்கு வருவோம். சில நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்போம்.

“புகழ்மணி எழுதிய பாரிஜாத புஷ்பாபஹரணம் என்ற நாட்டிய நாடகத்தை சென்னை கோகலே ஹாலில் நிகழ்த்தினோம். அப்போது எனக்கு வயது ஏழு. நாரதர் வேஷம் எனக்கு. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் திருமதி மதுரமும் வந்திருந்தனர்.

“ஜெமினி ஸ்டியோவில் கல்பனா என்ற ஹிந்திப் படத்தை உதயசங்கர் எடுத்தார். நாட்டியத்தை மையமாகக் கொண்ட படம் அது. மிகவும் திட்டமிட்டு உயிரைக் கொடுத்து அந்தப் படத்தை உதயசங்கர் எடுத்தார். எங்களுக்கெல்லாம் ஓராண்டு பயிற்சியளித்தார். வசனங்கள் சொல்வது, நிற்பது, நடப்பது போன்றவை கற்றுக் கொடுக்கப்பட்டன. அன்று பெற்ற பயிற்சியால்தான் பிற்காலத்தில் வெற்றிகரமான நடிகையாக என்னால் திகழ முடிந்தது.

“கல்பனா படம் எடுத்து முடிந்ததும் நாட்டியம் பயில்வதில் தீவிரம் காட்டினோம். ஸ்ரீராமுலு வீட்டுக் கல்யாணத்தில் நாட்டியமாடினோம். அப்போது அங்கே வந்திருந்த ஏவிஎம், நாட்டியத்தைப் பார்த்தபின், ‘வேதாள உலக’த்தில் நடனமாட வாய்ப்புத் தந்தார். அதைத் தொடர்ந்து சுமார் 150 படங்களில் நாட்டியம் ஆடியிருக்கிறோம்.

“ஒரு நாள், வெள்ளிக்குடம், குத்துவிளக்கு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், அவர் எடுக்கும் மணமகள் திரைப்படத்தில் நான்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு நடனமாடித்தான் பழக்கமே தவிர நடித்துப் பழக்கமில்லை என்று எவ்வளவோ முறை சொன்னாலும் கலைவாணர் கேட்கவில்லை. கடைசியில் வென்றவர் கலைவாணர்தான்.

“மணமகள் படத்தில் முதன்முதலில் நான் போட்டுக்கொண்ட நகைகள் எம்.எஸ். சுப்புலட்சுமியினுடையவை. கலைவாணர் கணித்தது போலவே மணமகள் படம் மிகவும் நன்றாக ஓடியது. அதனால் நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதும் உறுதியானது. சினிமாவில் நடித்தாலும் நாட்டிய நிகழ்ச்களில் பங்கேற்பதை நான் நிறுத்தவேயில்லை. சுமார் 10 ஆயிரம் நாட்டிய நிகழ்ச்சிகளை நான் நடத்தியிருக்கிறேன்.

“தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறேன். என்னுடைய திரைப்படக் காலத்தில் ஒரு பொன்னான வாய்ப்பு இந்திய – சோவியத் கூட்டுறவில் தயாரிக்கப்பட்ட பர்தேசி படத்தில் நடித்ததுதான். இந்தப் படப்பிடிப்புக்காக ரஷியா சென்றபோது பல ருசிகரமான அனுபவங்கள் ஏற்பட்டன.

“ரஷியாவில் ஒரு படத்தில் நடிப்பதையும்கூட அலுவலகத்தில் வேலை செய்வதைப் போலத்தான் கருதுகிறார்கள். அங்கே எல்லா நடிகர்களும் ஒரே இடத்தில்தான் ஒப்பனை செய்துகொள்கிறார்கள். யாருக்கும் எவ்வித சலுகையும் கிடையாது. ஹீரோ, ஹீரோயின்களுக்குக்கூட தனி ஒப்பனையோ, அறைகளோ இல்லை. லைட்டிங் பணிகளைக்கூட பெண்கள் செய்கிறார்கள். ரஷியாவில் பெண்கள் செய்யாத வேலைகளே இல்லை எனச் சொல்ல்லாம். உயரமான இடங்களில் ஏறி பெயிண்ட் அடிக்கிறார்கள். மின் கம்பி போடுகிறார்கள்.

“ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும் நடித்தவர்கள் அனைவரும் வரிசையில் நின்று அன்றைய சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ரஷிய மொழி தவிர்த்து வேறு எதுவுமே பேசுவதில்லை. நாங்களும் அதற்காகவே ரஷிய மொழியைக் கற்றுக் கொண்டோம். ரஷிய அனுபவம் எங்களுக்குப் பிற்காலத்தில் பல வகையிலும் உதவியது.

இதையும் படிக்க: அழியா மணிவண்ணன்!

“நான் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் பல உயர்ந்த வாய்ப்புகள் கிட்டின. ஒவ்வொரு ஆண்டும் நேருவின் பிறந்த நாளுக்கு நாங்கள்தான் நாட்டியமாடுவோம். பல பொது சேவைகளுக்கு நாட்டிய நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறோம்.

“எனக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்படும் வரை ஓயாமல் நடித்திருக்கிறேன். ஹிந்தியிலும் நடித்ததால் இந்தியா முழுவதும் புகழ் பெற முடிந்தது. திருமணத்துக்குப் பிறகுகூட, ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டுதான் அமெரிக்கா சென்றேன்.

“என் கணவர் நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் நடிக்கவில்லை. அவர் இறந்த பிறகு மனதின் வேதனையைக் குறைக்க நடிக்க விரும்புகிறேன். சுநீல்தத் எடுத்த படத்தில் ஒரு சின்ன ரோல் செய்திருக்கிறேன்.

“நடிக்கும் வரை நடிப்பதைத் தவிர எங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. எல்லாவற்றையும் எங்கள் அம்மாதான் பார்த்துக்கொள்வார். ஒரு முறை நாட்டிய நிகழ்ச்சிக்குச் செல்லும்போது ஒரு மாந்தோட்டத்தைப் பார்த்தோம். ராகினி வண்டியை நிறுத்தச் சொல்லி, மாங்காயை ஆவலுடன் பறித்துச் சாப்பிடத் தொடங்கினாள். அப்போது அங்கே வந்த தோட்டக்காரர், உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா, இப்படிப் பறிக்கிறாய் என சப்தம் போட்டார்.

“நாங்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, அந்தப் பணத்தை அட்வான்ஸாகக் கொடுத்து, அந்த 28 ஏக்கர் தோட்டத்தை வாங்கிவிட்டோம். அதுதான் பத்மினி கார்டன்ஸ் (சென்னை, நந்தம்பாக்கத்தில் இருந்தது).

“தெய்வ அருள், அன்னையின் முயற்சி. சகோதரிகளின் ஒத்துழைப்பு ஆகியவையே என்ன வெற்றிகரமான நடிகையாக்கின. பல மொழிகளிலும் பெரிய நடிகர்களுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினால் புகழும் கிட்டியது. நிஜமாகவே என் வாழ்க்கையில் நான் நடித்த காலம் பொற்காலம்தான்”.

செப். 24 – நடிகை பத்மினி நினைவு நாள்

இதையும் படிக்க: சில்க் ஸ்மிதாவின் நிறைவேறாத ஆசை!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024