Thursday, September 19, 2024

நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை

by rajtamil
0 comment 30 views
A+A-
Reset

புதுடெல்லி,

நாடு முழுவதும் வெப்ப தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் மக்கள் பாதிப்புகளை உணருகின்றனர். அவசியமின்றி வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது. வடமாநிலங்களில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப அலையும் வீசி வருகிறது.

இந்த நிலையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்.சி.டி.சி.) வெளியிட்டு உள்ள செய்தியில், நாடு முழுவதும் வெப்ப தாக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. பல மாநிலங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. மாநிலங்கள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் தரவுகள் வெளிவந்துள்ளன.

உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் வெப்ப தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை விவரங்கள் பற்றிய முழு அறிக்கைகள் பின்னர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், உத்தர பிரதேசத்தில் 166 பேர் உயிரிழந்து உள்ளனர் என மாநில தரவு தெரிவிக்கின்றது. பீகாரில் 22 பேர் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் மே மாதத்தில் 46 பேர் பலியாகி உள்ளனர். எனினும், வெப்ப தாக்க பாதிப்பு எண்ணிக்கை 1,918 ஆக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேபோன்று மாநிலங்கள் பகிர்ந்த தகவலின்படி, 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதன்படி, மார்ச் 1-ந்தேதியில் இருந்து இதுவரை மொத்தம் பதிவான வெப்ப தாக்க எண்ணிக்கை 24,849 ஆக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், மத்திய பிரதேசத்தில் அதிக அளவாக 14 பேரும், மராட்டியத்தில் 11 பேரும் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை அதிகளவில் இருக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024