நாட்டுக்கு வலிமை சேர்க்க கதர், கிராம பொருட்களை அதிகம் வாங்குவோம்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நாட்டுக்கு வலிமை சேர்க்க கதர், கிராம பொருட்களை அதிகம் வாங்குவோம்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: கதர், கிராம பொருட்களை அதிக அளவில் வாங்கி நாட்டுக்கு வலிமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காந்தியடிகளின் 156-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின்வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: கதர் ஆடைகளை அணிந்து மகிழ்வோம், நெசவாளர்களை ஆதரித்து மகிழ்வோம். தமிழகத்தில் உள்ள கதர் நூற்பாளர்கள், நெசவாளர்களின் பொருளாதார மேம்பாடு, அவர்களது நலனை கருத்தில் கொண்டு கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது அகிம்சை ஆயுதமாக அண்ணல் காந்தியடிகளால் முன்மொழியப்பட்ட கதர், கைத்தறி ஆடைகளை தயாரிப்பது, அதையே அணிவது என்பதன் அடிப்படையில், கைராட்டைகளை கொண்டு நூல் நூற்பதிலும், கதர் ரகங்களை நெசவு செய்வதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

கிராமப்புறங்களில் உள்ள கதர் நெசவாளர்களால் நவீன சூழலுக்கு ஏற்ப புத்தம்புது வடிவமைப்புகளில் கண்ணை கவரும் வண்ணத்தில் நெசவு செய்யப்படும் கதராடைகள், கிராமப்புற கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பலதரப்பட்ட கிராம பொருட்கள் தமிழகத்தில் உள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அதற்கு தமிழக அரசு தூண்டுகோலாக துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

மக்களுக்கு குறைந்த விலையில் கதர் பருத்தி, கதர் பாலியஸ்டர், கதர் பட்டு ரகங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ஆண்டு முழுவதும் 30 சதவீதம் தள்ளுபடிவிற்பனைக்கு அரசு அனுமதித்துள்ளது. இதனால், ஆண்டு முழுவதும் தள்ளுபடி விலையில் அவை விற்கப்பட்டு வருகின்றன.

காந்தியடிகளின் 156-வது பிறந்தநாளை முன்னிட்டு, கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கதர் நூற்போர், நெய்வோர் அனைவரது வாழ்க்கையிலும் உயர்வு ஏற்படுத்தி, கதர் தொழிலுக்கு கைகொடுக்கும் வகையில், தேச நலன் காக்கும் கதர், கிராம பொருட்களை அதிக அளவில் வாங்கி, நாட்டுக்கு வலிமை சேர்க்க வேண்டும் என மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளப்பதிவு: முன்னதாக காந்தி ஜெயந்தியையொட்டி முதல்வர் வெளியிட்ட எக்ஸ் வலைதளப்பதிவு:

அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது. இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காணவிரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்து, அவருக்குக் காணிக்கை ஆக்குவோம். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024