நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

by rajtamil
0 comment 27 views
A+A-
Reset

நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் ஆக.28-க்கு தள்ளி வைத்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதிநிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடிசெய்ததாக அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் யாதவ் மற்றும்குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் மூவருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்பாக நேற்று நடைபெற்றது. அப்போது தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் தரப்பில், இந்த வழக்கு அரசியல் முன்விரோதம் காரணமாக தங்கள் மீது போடப்பட்டுள்ளது என்றும், முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையை வட்டியுடன் திருப்பித்தர தயாராக இருப்பதாகவும், அதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பி்ல், தங்களது முதலீடுகள் முதிர்ச்சியடைந்த பிறகும் அதை திருப்பித் தரவில்லை என்பதால் காவல்துறையினரின் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி மலர் வாலண்டினா, குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான தீர்ப்பை வரும் ஆக.28-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். இதேபோல, இந்த மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024