Saturday, September 21, 2024

நியூயார்க் ஆடுகளத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டுக்குரிய அணுகுமுறையை பின்பற்றினோம் – ஹென்ரிச் கிளாசென்

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது.

நியூயார்க்,

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நியூயார்க்கில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 113 ரன் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 109 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 46 ரன் (44 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த தென்ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

டேவிட் மில்லர் முந்தைய ஆட்டத்தில் (நெதர்லாந்துக்கு எதிராக 59 ரன்) இங்குள்ள ஆடுகளத்தில் எப்படி விளையாடுவது என்பதை காண்பித்தார். ஏறக்குறைய அதே போன்று தான் இன்றைய ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் விளையாடினோம். இன்னும் சொல்லப்போனால் ஒரு நாள் கிரிக்கெட்டுக்குரிய அணுகுமுறையை பின்பற்றினோம்.

இதே மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தை பார்த்தோம். இரண்டும் சிறந்த அணிகளாக இருந்த போதிலும் 120 ரன் கூட எடுக்க முடியாமல் தடுமாறினர். அதனால் எங்களது மனநிலையை முற்றிலும் மாற்ற வேண்டி இருந்தது. 20 ஓவர் போட்டி என்பதை மறந்து ஒரு நாள் போட்டிக்குரிய மனநிலைக்கு வந்தோம். அதாவது மிடில் ஓவர்களில் நிதானமாக ஆடி விட்டு, கடைசி 3 ஓவர்களில் 20 ஓவர் ஸ்டைலில் அதிரடியாக ஆடுவது என்று திட்டமிட்டு செயல்பட்டோம்.

நேர்மையாக சொல்வது என்றால், பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்த இடத்தை விட்டு கிளம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். அதே சமயம் பந்து வீச்சாளர்கள் இந்த மைதானத்தில் தொடர்ந்து விளையாட விரும்புகிறார்கள். நாங்கள் இங்கு (நியூயார்க்) 3 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றி பெற்று எங்களது பணியை நிறைவு செய்து விட்டோம்.

ஆனாலும் நாங்கள் நினைத்ததை விட எல்லாமே கொஞ்சம் கடினமாகவே இருந்தது. இனி எங்களுக்குரிய ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்க உள்ளது. பொதுவாக வெஸ்ட் இண்டீசில் 160 ரன்கள் சவாலான ஸ்கோராக இருக்கும். நீங்கள் 160-170 ரன்கள் எடுத்து அதன் பிறகு பந்து வீச்சில் அசத்தினால் போதும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024