நிலமுறைகேடு விவகாரம்: சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்கு!

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மைசூரு நிலமுறைகேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத் துறை இன்று (செப். 30) வழக்குப் பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில் மைசூரு லோக் ஆயுக்தா காவல் துறையினர் செப். 27ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த நிலையில், தற்போது அமலாக்கத் துறையும் சித்தராமையா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிந்துள்ளது.

முதல்வர் சித்தராமையா, அவரின் மனைவி பி.எம். பார்வதி, மனைவியின் சகோதரர் மல்லிகார்ஜுன சாமி மற்றும் நிலம் விற்பனை செய்த தேவராஜூ ஆகியோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

நிலமுறைகேடு விவகாரம்

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

அதாவது, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை எடுத்துக்கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியது. இதில் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில், சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்து பிறப்பித்திருந்த உத்தரவை கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24-ஆம் தேதி ஏற்றுக்கொண்டது.

அமலாக்கத் துறை வழக்கு

மைசூரு நிலமுறைகேடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் மீது மைசூரு லோக் ஆயுக்தா காவல் துறையினர் செப். 27ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், அமலாக்கத் துறையும் இந்த விவகாரத்தில் சித்தராமையா மீது இன்று (செப். 30) வழக்குப்பதிவு செய்துள்ளது.

காவல் துறையின் முதல் தகவல் அறிக்கைக்கு இணையாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

வழக்குப் பதிவு செய்ததன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கவும், விசாரணையின் போது அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

படிக்க | தலித் இளைஞருக்கு சேர்க்கை: தன்பாத்-ஐஐடிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முடா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளால் தான் குறிவைக்கப்படுவதாக சித்தராமையா கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், இந்த வாரம் காவல் துறை மற்றும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024