நீட் தேர்வு: பீகாரில் கோடிக்கணக்கில் விளையாடிய பணம்; 30 மாணவர்களுக்கு வினாத்தாள், விடைத்தாள் விநியோகம்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

பாட்னா,

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக கடந்த மே 5-ந்தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 4-ந்தேதி முன்கூட்டியே வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண் என பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. பல்வேறு முறைகேடு புகார் கிளம்பி இருப்பதால் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையிலான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது.

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் குஜராத்தில் 5 பேர், பீகாரில் 13 பேர் என அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதுபற்றி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அளித்த புகாரை தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில், அரசு பணியாளர்களின் பங்கு பற்றி விசாரிக்கும்படியும் சி.பி.ஐ.யிடம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்ட 1,500 மாணவர்கள் என்றில்லாமல் அனைவருக்கும் மறுதேர்வு நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு இதனை ஏற்காத சூழலில், 1,563 பேர்களுக்கு மறுதேர்வு இன்று நடந்தது. எனினும், 750 பேர் தேர்வை எழுத வரவில்லை. இதனால், தேர்வில் முறைகேடு நடந்தது பற்றிய சந்தேகம் வலுப்பட்டு உள்ளது. இந்த சூழலில், பீகாரில் கைது செய்யப்பட்ட 3 பேர் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றின் நகல்களை பணம் பெற்று கொண்டு மாணவர்களுக்கு விநியோகம் செய்தது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி போலீசார் அளித்த விசாரணை அறிக்கை அடிப்படையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அளித்த தகவலில், இந்த விவரம் அடங்கியுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், நீட் தேர்வர்கள் 4 பேரின் நுழைவு அட்டையின் புகைப்பட நகல்கள், ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஒன்பிளஸ் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கைது செய்யப்பட்ட சிக்கந்தர் யதுவேந்து, அகிலேஷ் குமார் மற்றும் பித்து குமார் ஆகியோரை விசாரித்ததில், அவர்கள் 4 மாணவர்களுக்கு விநியோகித்து உள்ளது தெரிய வந்துள்ளது. அந்த தேர்வர்களை பிடித்து விசாரித்ததில், 25 முதல் 30 வரையிலான வேறு தேர்வர்களுக்கும் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டு உள்ளன என தெரிய வந்தது.

இதற்காக தேர்வு எழுதிய ஒவ்வொரு நபரிடம் இருந்தும், அவர்கள் தேர்ச்சி பெற உதவுவதற்காக ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது என விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது.

You may also like

© RajTamil Network – 2024