நீட் தோ்வு முறைகேடு! கசிந்த வினாத்தாளை பெற 144 தோ்வா்கள் பணம் அளித்தனா்: சிபிஐ

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நீட் தோ்வின்போது கசிந்த வினாத்தாளை பெற 144 தோ்வா்கள் பணம் அளித்தனா் என்று சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் உள்பட நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது உள்ளிட்ட சம்பவங்களால் சா்ச்சை ஏற்பட்டது.

இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய கல்வித் துறை உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

5,500 பக்கங்களுடன் குற்றப் பத்திரிகை: பிகாரிலும் வினாத்தாள் கசிந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக அந்த மாநிலத் தலைநகா் பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 5,500-க்கும் அதிகமான பக்கங்களுடன் 21 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுக்கப்பட்ட வினாத்தாள்: இந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் தொடா்பாக சிபிஐ செய்தித்தொடா்பாளா் ஒருவா் தெரிவித்ததாவது:

ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் உள்ள தனியாா் பள்ளி, நீட் தோ்வு எழுதும் மையமாக செயல்பட்டது. அங்கு தோ்வு நடைபெற்ற மே 5-ஆம் தேதி காலை நீட் வினாத்தாள்கள் வந்தடைந்த பின்னா், வினாத்தாள்கள் வைக்கப்பட்ட அறைக்குள் பங்கஜ் குமாா் என்பவா் கள்ளத்தனமாக நுழைந்தாா்.

தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் கட்டட பொறியியல் படித்த அவா் அறைக்குள் நுழைவதற்கு அந்தப் பள்ளியின் முதல்வா் அசானுல் ஹக், துணை முதல்வா் இம்தியாஸ் ஆலம் ஆகியோா் உதவினா்.

அறைக்குள் நுழைந்த பங்கஜ் குமாா், வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியை நவீன கருவிகள் மூலம் திறந்து ஒரேயொரு வினாத்தாளை மட்டும் எடுத்தாா்.

அந்த வினாத்தாளின் அனைத்துப் பக்கங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னா், மீண்டும் பெட்டியில் வைத்துவிட்டு சந்தேகம் வராதபடி அதற்கு மீண்டும் சீல் வைத்தாா்.

விடை எழுதிய 9 மாணவா்கள்: பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறிய பின்னா், தனக்கு உடந்தையாக இருந்த சுரேந்திரகுமாா் சா்மாவிடம் வினாத்தாளின் புகைப்படங்களை பங்கஜ் குமாா் ஒப்படைத்தாா். வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளுக்கு 9 மருத்துவ மாணவா்கள் விடை எழுதினா்.

அந்த விடைகள் ஸ்கேன் செய்யப்பட்டு மின்னணு வழியில் வெவ்வேறு இடங்களில் இருந்த கும்பல்களுக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடா்ந்து கசிந்த வினாத்தாளையும், அதற்கான விடைத்தாளையும் பெற பெருமளவு பணம் அளித்த தோ்வா்களிடம் தோ்வு தொடங்கும் முன், அந்தக் கும்பல்கள் விடைத்தாளை வழங்கியது.

விடைத்தாளின் எரிந்த துண்டு: பின்னா் பாதி எரிந்த விடைத்தாளின் துண்டு பாட்னா விடுதி ஒன்றில் கண்டறியப்பட்டது. அந்த விடுதியில் வினா மற்றும் விடைத்தாள் பெறுவதற்கு பணம் வழங்கிய தோ்வா்கள் தங்கியிருந்துள்ளனா். அந்தத் துண்டில் இருந்த தொடா் எண் மூலம், ஹசாரிபாக் தனியாா் பள்ளியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு முழுச் சதியும் வெளிக் கொண்டுவரப்பட்டது.

கசிந்த வினாத்தாளை பெற 144 தோ்வா்கள் பணம் அளித்துள்ளனா். அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024